யுவன் சங்கர் ராஜா இசையில் காளிதாஸ் ஜெயராம்!
சென்னை : காளிதாஸ் ஜெயராம் இப்பொழுது கிருத்திகா உதயநிதி இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
வித்தியாசமான கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து வரும் காளிதாஸ் ஜெயராம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சிம்பு பாடியிருக்கும் பாடலில் நடித்துவருகிறார்.

டாப்பு டக்கரு
யுவன் சங்கர் ராஜா இப்பொழுது சிம்புவின் மாநாடு படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்கிடையில் பல ஆல்பம் பாடல்களுக்கும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரஷ்மிகா மந்தனா நடித்திருந்த டாப்பு டக்கரு பாடலுக்கு இசையமைத்ததுடன் அலுங்காமல் குலுங்காமல் நடனமாடி கலக்கி இருந்தார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களில்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். புத்தம் புது காலை மற்றும் பாவக்கதைகள் உள்ளிட்ட ஆந்தாலஜி திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

திருநங்கை
இப்பொழுது மலையாளத்தில் பிளாக்பேக்கர்ஸ் மற்றும் ஜாக் அண்ட் ஜில்,ரஜினி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரஜினி தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிறது. பாவக்கதைகள் படத்தில் சதார் கதாபாத்திரத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற காளிதாஸ் ஜெயராம் இப்பொழுது யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இணைந்துள்ளார்.

சிம்பு பாடியுள்ளார்
யுவன் சங்கர் ராஜா, சிம்பு காம்போவுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்பொழுது யுவனின் இசையில் சிம்புவின் குரலில் புதிய ஆல்பம் பாடல் ஒன்று தயாராகிக் கொண்டுள்ளது. ஒரு பக்க கதை படத்திற்கு பிறகு மீண்டும் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இணைந்து இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக காளிதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதில் சிம்புவையும் டாக் செய்துள்ளார். விரைவில் இந்த பாடல் ரிலீஸ் ஆக உள்ளது. சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃபி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











