அரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு
நடிகர் சிம்பு விரைவில் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் சிம்பு விரைவில் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் சிம்பு தனக்கென பெரிய ரசிகர் படையையே வைத்திருக்கிறார். எத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் பலம் குறைந்ததாக தெரியவில்லை.
நடுவில் சிறிது காலம் சோர்ந்து இருந்த சிம்பு தற்போது மீண்டும் சுறுசுறுப்பாகி புதிய படங்களில் நடித்து வருகிறார். செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என தொடர்ந்து அவரது படங்கள் வெளியாகின.

மீண்டும் பிஸியான சிம்பு
இந்த படங்களை தொடர்ந்து வெளிநாடு சென்ற சிம்பு, உடல் எடையை குறைப்பதில் தீவிரம் காட்டினார். பின்னர் தம்பியின் திருமணத்தில் பிஸியாகினார். அதைத்தொடர்ந்து குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

கைவிட்ட மாநாடு
இதனிடையே சிம்பு வருகைக்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் பொறுமையாக காத்திருந்தினர். ஆனால் அவரது கால்ஷீட் தாமதமானதால் மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்குவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

சிம்புவின் கோபம்
இதனால் கோபமடைந்த சிம்பு மாநாடு படத்திற்கு போட்டியாக மகா மாநாடு எனும் படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இந்த படத்தை தனது தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த பட வேலைகளை தொடங்கும் முன்னர் மீண்டும் மற்றொரு படத்திற்காக வெளிநாடு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார் சிம்பு.

அரசியல் எண்ட்ரி
இந்நிலையில் நடிகர் சிம்பு அரசியலில் இறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்றுள்ள சிம்பு அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக தனது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அப்போது அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
நெருங்கிய நண்பர் டிவீட்
சிம்புவின் நெருங்கிய நண்பரும், அவரது ரசிகருமான ஹரி இது தொடர்பாக டிவீட் செய்துள்ளார். அதில், "எஸ்டிஆர் சென்னை திரும்பியதும் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது ரசிகர் மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறார். சமூக நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தை திரும்பி பார்க்க வைக்கும்", என குறிப்பிட்டுள்ளார்.

தந்தை டி.ஆர்
கடந்த சில வருடங்களாகவே சிம்பு அரசியலில் ஈடுபட உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. தந்தையை போலவே திராவிட கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட சிம்பு, 'பெரியார் குத்து' எனும் ஒரு பாடலை வெளியிட்டார். மேலும் அவரது தந்தை டி.ராஜேந்தரும் ஒரு அரசியல் பிரமுகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications