பிறந்தநாளில் தயாரிப்பாளரான சிம்பு.. 48வது படம்னு சொன்னது இப்போ 50 ஆக மாறிடுச்சு.. எப்போ ஆரம்பிச்சு?
சென்னை: நடிகர் சிம்புவின் 42வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கடைசியாக சமந்தா பிறந்தநாளுக்கு ஒரு படத்தின் போஸ்டர் வெளியாகி அந்த படம் அதன் பின்னர் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், சிம்புவின் 4 படங்கள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படத்தின் பிரத்யேக போஸ்டர் ஒன்று வெளியானது. ஒரு வீடியோ காட்சியையாவது வெளியிட்டு இருக்கலாமே என சிம்பு ரசிகர்கள் அந்த போஸ்ட்டுக்கு கீழ் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க அந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போகிறார் என அறிவித்த நிலையில், தற்போது STR48 படமாக இருந்த அந்த படம் STR50 படமாக மாறியுள்ளது. மேலும், சிம்புவே பிரம்மாண்ட பட்ஜெட்டில் அந்த படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
லிட்டில் சூப்பர் ஸ்டார்: நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில், லிட்டி சூப்பர் ஸ்டார் என்றே அடைமொழி வைத்துக் கொண்டு வந்தார். அதன் பின்னர், அந்த பட்டத்தை எல்லாம் துறந்துவிட்டு சிம்புவாக மாறினார். தற்போது ஆத்மன் STR என்று தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இன்று வெளியான சிம்புவின் 50வது படம் குறித்த அறிவிப்பில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக சிம்பு இருந்தது போன்ற குழந்தை அரசனாக சிம்பு இருக்கும் போஸ்டரை தேசிங்கு பெரியசாமி வெளியிட்டுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலமாக நடிகர்களின் குழந்தைப்பருவ வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், ஆதவன் படத்தில் சூர்யாவை காட்டியது போல 50வது படத்தில் குழந்தை சிம்புவை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வரப்போகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.

அப்போ எஸ்டிஆர் 48 படம்?: பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 49வது படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து 'God of Love' எனும் டைட்டிலில் இயக்கும் அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. சிம்புவின் 48 படமாக தக் லைஃப் படம் தான் வரப்போகிறதா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். சிம்புவின் தக் லைஃப், பார்க்கிங் பட இயக்குநரின் படம் வெளியானால் 50வது படத்துக்கு அது பிசினஸ்க்கு நன்றாக இருக்கும் என்கிற திட்டத்துடன் சிம்பு இப்படி செய்திருக்கிறார் எனக் கூறுகின்றனர்.
பெரிய ரிஸ்க்: நடிகர் சிம்பு 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தனது 50வது படத்தை சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உருவாக உள்ள நிலையில், அந்த படம் வெளியானால் சிம்புவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பல கோடி பட்ஜெட்டில் அந்த படத்தை உருவாக்குவது சிம்புவுக்கு பெரிய ரிஸ்க் தான் என்றும் கூறுகின்றனர். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் வெளியான கங்குவா படம் கைகொடுக்காமல் ஏமாற்றிய நிலையில், தேசிங்கு பெரியசாமி மீது சிம்பு வைத்திருக்கும் பெரிய நம்பிக்கையை அவர் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது வெளியாகி உள்ள போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வாடை அடிக்கிறது என்றும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











