சிம்ரன், சசிகுமாருக்கு இன்னொரு ஹிட் பார்சல்?.. பட்டையை கிளப்பும் டூரிஸ்ட் ஃபேமிலி ட்ரெய்லர்
சென்னை: சசிக்குமார் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இரண்டு படங்கள் மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும் அந்த இரண்டு படங்களும் இன்றுவரை கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிலும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த இரண்டு படங்களுக்கு பிறகு சசிகுமார் படங்கள் இயக்கவில்லை. அதேசமயம் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் கடைசியாக நந்தன் திரைப்படத்தில் நடித்தார். இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
இயக்குநர்கள் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிக்குமார். சேது, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிவிட்டு தனியாக படம் இயக்க திட்டமிட்டு கதையை உருவாக்கி சாந்தனுவிடம் கூறினார். ஆனால் அதில் அவர் நடிக்க விரும்பவில்லை. அதேபோல் படத்தை தயாரிக்கவும் எந்த கம்பெனியும் முன்வரவில்லை. இதனையடுத்து ஜெய்யிடம் கதை சொல்லி ஓகே ஆனதை அடுத்து சுப்ரமணியபுரம் திரைப்படம் முதல் படியை தாண்டியது. ஆனால் யாரும் தயாரிக்க முன் வராததால் சசிக்குமாரே படத்தையும் தயாரித்தார். ஜெய்,சசிக்குமார், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு, ஸ்வாதி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தத் திரைப்படமானது வெளியானது.
கோலிவுட்டின் பெஞ்ச்மார்க் சுப்ரமணியபுரம்: மதுரையை மையமாக வைத்தும், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்துக்காக பலியாகும் இளைஞர்களை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தின் போஸ்டரை பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் படத்தை பார்த்து வாயடைத்துப்போனார்கள். அந்த அளவுக்கு சசிக்குமாரின் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது. சிறப்பான எமோஷனல், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என பக்கா பேக்கேஜாக அமைந்தது சுப்ரமணியபுரம் திரைப்படம்.
இயக்கத்திலிருந்து ஒதுங்கிய சசிகுமார்: முதல் படமே மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் என்ற பெயரை எடுத்த சசிகுமார் அடுத்ததாக ஈசன் படத்தை இயக்கினார். அந்தப் படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்தப் படத்தோடு இயக்கத்திலிருந்து ஒதுங்கிவிட்டார் சசிக்குமார். அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். கடைசியாக அவர் நந்தன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தது.

கவனம் ஈர்த்த சசிகுமார்: படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அதிலும் சசிகுமாரின் நடிப்புக்கு மிகப்பெரிய அப்ளாஸ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தாலும்; அவர் மீண்டும் படத்தை இயக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுகின்றன. அதன்படி அவர் குற்றப் பரம்பரை நாவலை வெப் சீரிஸாக இயக்கவிருக்கிறார். அதன் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி: இப்போது அவர் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார்.அபிஷன் ஜீவிந்த் என்ற புதுமுகம் படத்தை இயக்கியிருக்கிறார். இதன் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. படமானது மே ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளியான ட்ரெய்லர்: இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரில், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் குடும்பம் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பான காட்சியமைப்புகள் இருக்கின்றன. டீசரை பார்க்கையில் இந்தப் படம் காமெடி ஜானரில் மட்டும்தான் உருவாகியிருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் இன்று வெளியாகியிருக்கும் ட்ரெய்லரை பார்க்கையில் காமெடி மட்டுமின்றி எமோஷனலாகவும் படம் உருவாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. சசிகுமார் மற்றும் சிம்ரனுக்கு கண்டிப்பாக இந்தப் படம் ஹிட் லிஸ்ட்டில் சேரும் என்று ரசிகர்கள் இப்போதே கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











