துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸாகும்?.. சிம்ரன் கொடுத்த சூப்பர் அப்டேட்
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு விக்ரமை வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். சூர்யாவிடம் முதலில் சென்ற இந்த கதை அதன் பிறகு விக்ரமிடம் வந்தது. படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் பண பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது. ஒருவழியாக ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் ரிலீஸாகவில்லை. இந்தச் சூழலில் படம் குறித்து சிம்ரன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் அடுத்தடுத்து இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தார். போலீஸ் ஸ்டோரி மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய ஜானர்களில் தனது தனித்துவமான மேக்கிங்கால் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார்.
துருவ நட்சத்திரம்: சூழல் இப்படி இருக்க துருவ நட்சத்திரம் என்ற கதையை முதலில் சூர்யா மற்றும் ரஜினியிடம் கௌதம் சொல்ல இருவராலும் நடிக்க முடியவில்லை. அதனையடுத்து இந்தப் படத்தில் விக்ரம் கமிட்டானார். படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரிது வர்மா, விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
படத்துக்கு பிரச்னை: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து முடிக்கப்பட்டாலும் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் காரணமாக விக்ரமும், கௌதம் மேனனும் தங்களது அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டனர். கௌதம் மேனன் நடிப்பிலும் தீவிரமாக கவனம் செலுத்துகிறார். தனக்கு ஏற்பட்ட கடனை அடைக்கவே அவர் பல படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் லியோ படத்தில் நடித்திருந்தார். இடையில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு படமும் வரவேற்பையே பெற்றது.

தொடங்கிய வேலைகள்: இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படம் மீண்டும் தூசு தட்டப்பட்டு ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை மும்முரமாக செய்தனர். அதன்படி படமானது கடந்த வருடம் 2023ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் படத்தை பார்க்க மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி தருவதாக சொல்லி ஏற்கனவே 2 கோடி ரூபாயை கௌதம் மேனன் வாங்கியிருந்தார். படமும் இயக்கவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்கு கௌதம் மேனன் 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனால் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனது. பிறகு இந்த விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. எனவே விரைவில் படமானது ரிலீஸாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கௌதம் மேனன் நம்பிக்கை: சமீபத்தில் கௌதம் மேனன் அளித்த ஒரு பேட்டியில்கூட, 'துருவ நட்சத்திரம் திரைப்படம் எப்போது வெளியானாலும் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி இப்படத்தில் சூர்யா நடிக்க முடியாது என்று கூறியது தனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்ததாகவும் கூறியது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் படம் குறித்து சிம்ரன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
சிம்ரன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "துருவ நட்சத்திரம் முழுமையான ஆக்ஷன் படம். அதுமட்டுமின்றி படு ஸ்டைலிஷாகவும் உருவாகியிருக்கிறது. அப்படத்தின் ரிலீஸுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக சரியான நேரத்தில் வெளியாகும். மக்கள் கண்டிப்பாக படத்தை விரும்புவார்கள். படத்தில் விக்ரமும் செம ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார்" என்றார். அவரது இந்தப் பேட்டி ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











