சிந்து சமவெளி பட இயக்குனர் வீடு மீது தாக்குதல்!

இதையடுத்து அவர் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உயிர், மிருகம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் சிந்து சமவெளி. இந்தப் படமும் சர்ச்சைக்குரிய கருத்தை கொண்டிருப்பதால் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை கே.கே.நகர் பங்காரு காலினியில் உள்ள இயக்குநர் சாமியின் வீடு மீது மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கே நிறுத்தப்பட்டிருந்த குவாலிஸ் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.
இது குறித்து சாமி கூறுகையில், சிந்து சமவெளி படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கு மிரட்டல் வந்தது. படம் வெளியான பிறகு எனக்கு தொடர்ச்சியாக செல்போன் மூலம் மிரட்டல்கள் வந்தன. இதனால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் தான் நேற்று நள்ளிரவு என் வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிந்து சமவெளி படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளித்துள்ளது. சிக்கலான உறவை இதை விட நாசுக்காக காட்ட முடியாது என்று அதிகாரிகள் என்னிடம் பாராட்டினர்.
இந்த படத்திற்கு ஏன் எதிர்ப்பு என்று எனக்கு புரியவில்லை.
ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதற்கு ஒரு சில அமைப்புகளும் தனி மனிதர்களும்தான் மிரட்டுகின்றனர்.
தற்போது நடைபெற்றுள்ள தாக்குதலால் எனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. காரை அடித்து உடைத்தவர்கள் நாளை என்னையோ அல்லது எனது குடும்பத்தினரையோ தாக்கலாம். எனவே எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு கேட்டு கே.கே.நகர் காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளேன் என்றார்.


Click it and Unblock the Notifications











