போதை பொருள் கடத்திய 'சிங்கம் 2' பட நடிகர் அதிரடி கைது.. பரபரப்பு!
சென்னை: போதை பொருள் கடத்திய சிங்கம் 2 பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் சிங்கம் 2. இந்தப் படம் 2010ஆம் ஆண்டு வெளியான சிங்கம் படத்தின் சீக்குவலாக தயாரிக்கப்பட்டது.
சிங்கம் 2 படத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, ரஹ்மான், ராதா ரவி, நாசர், விஜயகுமார், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சிங்கம் 2 பட நடிகர்
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படும் கான்செப்ட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. சிங்கம் சீரிஸ் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இந்நிலையில் சிங்கம் 2 படத்தில் நடித்த நடிகர் ஒருவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் போதை பொருள் விற்பனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில மாதங்களாகவே போதை பொருள் விற்பனை ஜோராக நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து வருகிறது. இதனால் அடிக்கடி பெங்களூருவில் போலீசார் போதை பொருள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசாருக்கு ரகசிய தகவல்
அந்த வகையில் நேற்றும் பெங்களூருவில் உள்ள கேஜி ஹள்ளி பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

போதை மருந்து சப்ளை
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த நைஜீரியாவை சேர்ந்த செக்வூம் மால்வின் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் கல்லூரி மாணவர்களுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் போதை மருந்து சப்ளை செய்வது தெரியவந்தது.

சிங்கம் 2 நடிகர்
மேலும் அந்த நபரிடமிருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே கைதான செக்வூம் மால்வின், சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 படத்தில் நடித்தவர் என தெரியவந்துள்ளது.

போதை பொருள் கடத்தல் கும்பல்
செக்வூம் மால்வின் தமிழ் மட்டுமின்றி கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிங்கம் 2 படத்தில் போதை பொருள் கடத்தல் மன்னனான டேனியுடன் போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக நடித்திருப்பார் செக்வூம் மால்வின்.


Click it and Unblock the Notifications











