பிரபல இயக்குநரின் தந்தை திடீர் மறைவு.. திரையுலகினர் ஆறுதல்!
சென்னை: இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88.

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநரான ஹரி, 2002ம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடித்த தமிழ் என்ற படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான சாமி படத்தை இயக்கி மாஸ் இயக்குநர் என பெயர் எடுத்தார். காவல்துறை அதிகாரியாக நடித்த நடிகர் விக்ரமின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் மிக முக்கியமான படமாகும்.
வெற்றி இயக்குநர்: தனது இரண்டாவது படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் ஹரி, கோவில், அருள், தாமிரபரணி, வேல், வேங்கை, ஆறு, சிங்கம், சிங்கம் 2 என, பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படத்தை கொடுத்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக யானை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
விஷாலுடன் 3வது முறையாக: தற்போது ஹரி, மூன்றாவது முறையாக நடிகர் விஷாலுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் காரைக்குடியில் முடிந்தது.
தந்தை காலமானார்: இந்நிலையில், இயக்குநர் ஹரியின் தந்தையான வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கு எப்போது: இதையடுத்து, ஹரியின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளது. அவருக்கு ஐந்து மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். தந்தையை இழந்து வாடும் ஹரிக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹரியின் தந்தை காலமான செய்தியை அறிந்த நடிகர் அருண் விஜய் வணங்கான் படப்பிடிப்பில் இருந்து விரைந்து வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மகள் ப்ரீத்தாவை இயக்குநர் ஹரி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











