விஜய் மனசு வைத்திருந்தால் EPS க்குப் பின் அவர் தான் தலைமை.. மிஸ் பண்ணிட்டாரு விஜய்.. ஆதங்கப்படும் சிங்கமுத்து
சென்னை: நடிகர் விஜய் மட்டும் அதிமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்குப் பின்னர் அவர்தான் தலைமையேற்று நடத்தி இருப்பார், அப்படியான சூழல் உருவாகி இருக்கும் என்று தனது நகைச்சுவை நடிகரும் அதிமுகவை சேர்ந்தவருமான சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டுள்ளார். இவரது தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலைச் சந்தித்துள்ளது. முதல் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று அவரது கட்சியினர் நம்பிக்கையில் உள்ளனர். இந்த தேர்தலுக்கு முன்னர் நடிகர் விஜய் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சென்றுவிடுவார் என்று பேச்சுக்கள் எழுந்தது. அதிமுக- பாஜகவுடன் விஜய் இணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால் ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு சவாலாக தேர்தல் களம் மாறி இருக்கும் என்று பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது அதிமுக - பாஜகவுடன் கூட்டணிக்குச் செல்லவில்லை.
இப்படி இருக்கையில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அதிமுக குறித்தும், விஜய் குறித்தும் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, "இந்த தேர்தல் யாருமே யூகிக்க முடியாத தேர்தலாக இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரைப் பார்க்க பெரிய ரசிகர் கூட்டம் வருகிறது. இதற்கு முன்பாக தேர்தலில் அவர் போட்டியிட்டு இருந்தால் அவருக்கு எவ்வளவு சதவீதம் ஓட்டு வரும் என்று தெரிந்திருக்கும். ஆனால் அவர் தேர்தலுக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் அதை யாராலும் யூகிக்க முடியவில்லை. தமிழ் மக்களும் ஒரு நடிகராக அவரால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

அதுவும் விஜய் எடுத்தவுடனேயே முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைக்கிறார். புரட்சித் தலைவரால் கூட எடுத்தவுடன் முதலமைச்சராக முடியவில்லை. இருந்தாலும் மக்கள் அவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. சில நேரங்களில் எல்லா கட்டமைப்புகளும் இருக்கிற மிகப்பெரிய கட்சிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கிறது.
விஜய்யின் சின்னம் விசில் என்பது, பொதுவாகவே சினிமாவில் நல்ல சீன் வந்தால் மக்கள் விசில் அடித்து பழகிவிட்டார்கள். விசில் அடித்தாலே மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். விசில் என்றாலே அது சவால் விடுவது தான். அதிமுக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாது. அடுத்த 500 வருடங்களுக்கு ஒரே கட்சி இருக்கப்போகிறதா என்றால், இல்லை தானே. அடுத்தடுத்த தலைமுறையினர் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்.
அப்படித்தான் விஜய் வந்திருக்கிறார். இந்த தேர்தலில் விஜய் எவ்வளவு வாக்குகளை பெற போகிறார் என்பதை பார்த்து தான் நமக்கு தெரியும். விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளைப் பார்க்காமலே அவருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தேர்தலுக்கு முன்பே அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து தனக்கு இத்தனை சீட் வேண்டும் என்று கேட்டிருந்தால் எடப்பாடியார் நிச்சயமாக கொடுத்திருப்பார். அவருக்கு பின் விஜய் இளம் தலைமுறைனரை தலைமை தாங்கி இருப்பதற்கான வாய்ப்பு காலம் கொடுத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications