பொறாமையா இருக்கு.. கூலி படம் பார்க்க லீவு, FDFS டிக்கெட், ஸ்நாக்ஸ் வாங்க பணம் கொடுத்த நிறுவனம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாவதையொட்டி, சிங்கப்பூரில் உள்ள இரண்டு நிறுவனங்கள் தங்கள் தமிழ் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளன. இந்தியாவிலும் பல நிறுவனங்கள் இத்திரைப்பட வெளியீட்டு தினத்தில் விடுமுறை அளித்துள்ளன.
சிங்கப்பூரில் உள்ள 'ஃபார்மர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிடிஇ லிமிடெட்' நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை, முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்டுகள், மற்றும் உணவு, பானங்களுக்காக 30 சிங்கப்பூர் டாலர் கொடுப்பதாக அறிவித்துள்ளது இங்குள்ள ரசிகர்களையே ஒரு நிமிஷம் தலை சுத்த வைத்து விட்டது. இது "ஊழியர் நலன் மற்றும் மன அழுத்த மேலாண்மை செயல்பாடு" என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது தான் கூடுதல் ஹைலைட்.

மற்றொரு சிங்கப்பூர் நிறுவனமான 'எஸ்பி மார்ட்', ஆகஸ்ட் 14 அன்று காலை 7 மணி முதல் 11:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பிரகாஷ் நம்பியார், "காலை 11:30 மணி முதல் வழக்கம் போல் வணிகம் தொடங்கும். சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மதுரை கிளையுள்ள ஒரு நிறுவனம், ஆகஸ்ட் 14 அன்று தங்கள் அனைத்து கிளைகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. "சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 'கூலி' திரைப்படம் வெளியாவதையொட்டி, ஆகஸ்ட் 14, 2025 அன்று விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மனிதவளத் துறைக்கு வரும் விடுமுறை கோரிக்கைகளை தவிர்க்கும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், "ரஜினிசம் 50வது ஆண்டு விழாவை ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குவதன் மூலம் கொண்டாட உள்ளோம்" என்று அந்நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் போன்ற நட்சத்திரங்களையும் கொண்டுள்ளது. இதன் டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், முன்கூட்டிய டிக்கெட் விற்பனை சாதனை அளவை எட்டியுள்ளது.
'கூலி' திரைப்படம் சென்சார் போர்டால் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது, இது குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கு கிடைத்த அதிகபட்ச வெளிநாட்டு உரிமை தொகை இதுவாகும். ஆகஸ்ட் 14 அன்று 100 நாடுகளுக்கு மேல் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படம் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'வார் 2' திரைப்படத்துடன் ஒரே நாளில் மோதுகிறது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நிறுவனம் FDFS டிக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் வாங்க 30 டாலர் கொடுத்தும் ஊழியர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருப்பதை பார்த்து பல தமிழ்நாட்டு ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் நாமும் சிங்கப்பூரில் அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால் எப்படி நல்லா இருந்திருக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கூலி படத்துக்கு மற்ற இடங்களில் ஸ்பெஷல் ஷோ அனுமதி கிடைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு முன்னதாகவே பலரும் படத்தை பார்த்துவிடும் பாக்கியத்தை பெற்றுள்ளனர். இங்கே இன்னமும் காலை 9 மணி ஷோவுக்கே அனுமதி கிடைக்கவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் அதை பெற போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











