சிரிச்சி பேசியே லைஃபை காலி பண்ணாதீங்க.. விமர்சகர்களுக்கு சிங்கப்பூர் சலூன் இயக்குநர் கோரிக்கை!
சென்னை: இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோகுல். சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கியவர் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விமர்சகர்கள் குறித்தும் குறிப்பாக வலைப்பேச்சு குழுவினருக்கும் தனது கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா மற்றும் அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கோகுல். சிம்புவை வைத்து கொரோனா குமார் எனும் படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அந்த படம் ட்ராப் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

சிங்கப்பூர் சலூன் இயக்குநர்: ஆர் ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் சிங்கப்பூர் சலூன். சிகை அலங்காரம் செய்பவர்களை இழிவாகக் கருதக் கூடாது என்றும் அந்தத் தொழிலை அவர்கள் ஃபேஷனுடன் செய்து மாதம் பல லட்சங்களை சம்பாதித்து வருகின்றனர் என்றும் தனது லேட்டஸ்ட் பேட்டியில் கோகுல் பேசியுள்ளார்.
தயாரிப்பாளருடன் சண்டை?: இயக்குநர் கோகுலுக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விட்டதாகவும் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் சிக்கலை சந்தித்து இருப்பதாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் அந்தணன் மற்றும் பிஸ்மி உள்ளிட்ட சினிமா விமர்சகர்கள் பேசியது தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும் தான் ஐந்து படங்களை இயக்கி விட்டேன் இதிலிருந்து மீண்டு விடுவேன். மீண்டு வந்துதான் சிங்கப்பூர் சலூன் படத்தை வெளியிட்டு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று படம் ஹிட் ஆகியுள்ளது. ஆனால், முதல் பட இயக்குநர்களை இதே போல பேசினால் அவர்கள் வாழ்க்கையை காலியாகிவிடும்.
வலைப்பேச்சு டீமுக்கு கோரிக்கை: சினிமாவை வைத்துதான் நம்முடைய பிழைப்பே ஓடுகிறது. சினிமா நல்லா இருந்தால் மட்டும் தான் அதைப் பற்றி பேச முடியும். வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பேசும் மூன்று நண்பர்களுக்கு கோரிக்கை வைத்துக்கொள்கிறேன் சிரித்துக் கொண்டே பலரது வாழ்க்கையை காலி செய்து விட வேண்டாம். கொரோனாவுக்கு பிறகு சினிமா எடுப்பது சாதாரண காரியம் அல்ல, பெரிய நடிகர்கள் படம் மட்டுமே ஓட வேண்டும் என நினைக்க வேண்டாம். சிறு பட்ஜெட் படங்கள் ஓடினால் தான் சினிமா வளரும் என கோகுல் கோரிக்கை வைத்துள்ளார்.
காலி பண்ணிடாதீங்க: தனக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தகவல் வந்தால், நேரடியாக தன்னிடமோ அல்லது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடமோ போன் செய்து கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளலாம். உண்மையாகவே சண்டை போட்டிருந்தால் கூட அதை வெளியிடுவதன் மூலம் அந்த இயக்குநரின் வாழ்க்கை தான் பாதிக்கப்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே என ரொம்பவே ரெக்வஸ்ட் ஆக கேட்டிருக்கிறார்.
விமர்சனங்கள் குறித்து: சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் பாதி காமெடியாகவும் இரண்டாம் பாதி கருத்தாகவும் உள்ள நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்கிற கேள்விக்கு விமர்சனம் சொல்வது அவர்களது தனிப்பட்ட உரிமை. எந்த விமர்சகரும் பொதுமக்களின் கேட்டை கேட்டு கூறுவதில்லை. அவர்களுக்கு தோன்றுவதை சொல்கின்றனர். விமர்சனத்தால் சில படங்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறது. பல படங்களுக்கு அது சிக்கலாகவும் மாறியிருக்கிறது. விமர்சனம் செய்வதில் நேர்மையை கடைபிடித்தாலே நல்லா இருக்கும். ஆனால், பொய்யான தகவலையோ ஒருவரது வாழ்க்கையை பாதிக்கக் கூடிய உண்மையான தகவலையோ வெளிப்படையாக சொல்வதற்கு முன்பாக ஒரு முறை சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு விட்டு பேசலாம் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











