பவதாரணியின் கடைசி ஆசை.. கணவர் சபரிராஜ் உருக்கத்துடன் பகிர்ந்த விஷயம்!
சென்னை: புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரபல பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணி இலங்கையில் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் இசையை நேசிக்கும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தன்னுடைய அழகு கொஞ்சும் வாய்சால் பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ள பவதாரணி, இசையமைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது இறுதி ஆசை குறித்து கணவர் சபரிராஜ் தற்போது தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதுதான் அவரது கடைசி ஆசையாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை என்றும் அவர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மறைந்த பாடகி பவதாரணி: மறைந்த பாடகி பவதாரணி இளையராஜாவின் செல்ல மகளாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்/ கடந்த 1995ம் ஆண்டில் வெளியான பிரபுதேவாவின் ராசையா படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற தனித்துவமான பாடல் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட பவதாரணி. தொடர்ந்து தன்னுடைய அப்பா இசையிலும் கார்த்திக் ராஜா. யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்களை பாடியுள்ளார்/ கடந்த 2002ம் ஆண்டில் ரேவதி இயக்கத்தில் வெளியான மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமான பவதாரணி தொடர்ந்து ரேவதி இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ஃபிர் மிலேங்கே படத்திலும் இசை அமைத்திருந்தார்.
கொழும்பில் உயிரிழப்பு: கடந்த 1991ம் ஆண்டில் இளையராஜா உருவாக்கிய ராஜாவின் ரமண மாலை என்ற இசை தொகுப்பிலும் இவர் பாடல் பாடியுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இவர் புற்றுநோய் காரணமாக கொழும்பில் உயிரிழந்தார். முன்னதாக கொழும்பில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த பவதாரணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பும் ஏற்பட்டதால் பவதாரணி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பவதாரணியின் கடைசி ஆசை: இதனிடையே பிரபல வார இதழுக்கு பேட்டி அளித்துள்ள பவதாரணியின் கணவர் சபரி ராஜ், கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி தானும் பவதாரணியும் சிகிச்சைக்காக இலங்கைக்கு கிளம்பியதாகவும் உடல்நிலை மோசமாகும் சூழல் இருந்ததால் இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போதுதான் பவதாரணி தன்னுடைய அப்பா இளையராஜா, இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருவதாகவும் அவரை பார்க்க வேண்டும் போல இருப்பதாகவும் கூறியதாக குறிப்பிட்டார். பவதாரணி ஆசைப்பட்டது போலவே ராஜா அங்கிளை பார்த்து பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சபரிராஜ் உருக்கம்: ஆனால், அப்பாவை பார்க்க வேண்டும் என்ற பவதாரணியின் ஆசையே கடைசி ஆசையாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். பவதாரணி பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இளையராஜா இசையில் பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட். இந்தப் பாடலுக்காக பவதாரணிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.


Click it and Unblock the Notifications











