பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை.. மருத்துவ நிபுணர்கள் கண்காணிப்பு.. நல்ல செய்தி சொன்ன குடும்பத்தினர்!
லண்டன் : கர்நாடக திரையிசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் உடல்நிலைக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
58 வயதான பாம்பே ஜெய ஸ்ரீ, பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி விருது என ஏராளமான விருதுகனை பெற்றுள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார் ஜெயஸ்ரீ.

பாம்பே ஜெய ஸ்ரீ
இளையராஜா,ஏர்.ஆர் ரஹ்மான்,ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாம்பே ஜெயஸ்ரீ பாடி உள்ளார். கஜினி படத்தில் இடம் பெற்ற சுட்டுவிழிசுடரே பாடல், பொல்லாதவன் படத்தில் மின்னல்கள் கூத்தாலும் மழைக்காலம், மின்னலே படத்தில் வசீகரா என பல ஹிட் பாடல்களை பாடி தமிழ் ஆடியன்ஸின் மனதில் இடம்பிடித்தவர் பாம்பே ஜெய ஸ்ரீ.

சுயநினைவை இழந்து
இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்ற ஜெயஸ்ரீ உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் லிவர்பூல் நகர் ஹோட்டலில் தங்கி இருந்த அவர் நேற்று ஹோட்டல் அறையில் இருந்து வெகுநேரமாக வெளியே வராததால், சந்தேகமடைந்து, அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது, பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவை இழந்து,மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

நலமாக இருக்கிறார்
இதையடுத்து, அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்ததால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மருத்துவர்களுக்கு நன்றி
இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இருப்பினும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் தற்போது நலமாக இருக்கிறார். உடனடியாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இரண்டு நாள் ஓய்வு தேவை
தற்போது,அவரின் உடல்நலம் சீராக உள்ளதாகவும், இரண்டு நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவருக்கு தற்போது ஓய்வு தேவை என்பதால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான தனிப்பட்ட நேரத்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். நலமாக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.


Click it and Unblock the Notifications











