சின்மயியை உள்ளே விடமாட்டோம்.. ராதா ரவி தவறான நபர்.. கடுப்பான பிரபல பாடகி!
சென்னை: மார்ச் 17 ஆம் தேதி தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராதா ரவி, டப்பிங் யூனியனுக்கு சந்தா கட்டாத சின்மயியை யூனியன் காம்பவுண்டில் கூட விட மாட்டோம் என்று பேசி இருந்தார். இதற்கு சின்மயி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர் சங்கத்தேர்தலில் தலைவராக ராதா ரவி மீண்டும் போட்டியிடுகிறார். இதுகுறித்து, செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் பேசிய ராதா ரவி, இந்த முறையும் தலைவராக நான் போட்டியிடுகிறேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நான் பல எதிரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில் தான் பார்க்கிறேன். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு யூனியன் என்றால், என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்ல வேண்டும். நான் தைரியமாக தன்னம்பிக்கையோடு இருக்கிறேன் என்றார்.

காம்பவுண்டில் கூட விடமாட்டோம்: இதையடுத்து செய்தியாளர் ஒருவர், சின்மயியை மீண்டும் யூனியனில் சேர்த்துக்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராதா ரவி, சின்மயியை நாங்கள் வெளியே அனுப்பவில்லை. ஒவ்வொரு வருடமும் சந்தா கட்ட வேண்டும். கட்டவில்லை என்றால் மெம்பர்ஷிப் காலாவதியாகிவிடும். சந்தா கட்டாததால் தனது உரிமையை அவரே இழந்து விட்டார். சின்மயி மீண்டும் வந்தால் சங்கத்தின் கட்டிடத்திற்கு வெளியில் வேண்டுமானால் நிற்கட்டும். ஆனால், நிச்சயமாக காம்பவுண்டில் கூட சேர்க்க மாட்டோம் என்று காட்டமாக பேசி இருந்தார் ராதா ரவி.
ராதாரவி போன்று தவறான நபர்கள்: இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில், ராதாரவியின் பேச்சுக்கு சின்மயி எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், மலேஷியா நாடு வழங்காத போலி டத்தோ பட்டத்தை தனக்குத் தானே ராதாரவி சூட்டிக்கொண்டுள்ளதாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டத்தோ வளாகம் என்று பெயரிட்ட டப்பிங் யூனியன் காம்பவுண்ட் மற்றும் அந்த கட்டடத்தையே சட்டத்துக்கு புறம்பானது என சென்னை மாநகராட்சி சீல் வைத்து தரைமட்டம் ஆக்கியதாக கூறி உள்ளார். யூனியன் உறுப்பினர்களின் உழைப்பில் இருந்து எடுத்த காசு மண்ணோட போச்சு என்றும், ராதாரவியை போன்ற தவறான நபர்கள் இருக்கும் இடத்திற்கு தாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் சின்மயி கடுமையாக சாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











