மார்பிங் புகைப்படங்களால் மிரட்ட பார்த்தவர்களுக்கு பளார் விட்ட சின்மயி.. எங்க வந்து யாருகிட்ட?
சென்னை: பாடகி சின்மயி இந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். அவரது குரலில் பாடல்கள் வெளியாகிறது என்றாலே ரசிகர்களை மெய் மறக்கச் செய்து விடுகிறார். ஆனால் சின்மயிக்கு பாடகி என்ற முகம் மட்டும் கிடையாது. அவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக பார்க்கப்படுகிறார். திரைத்துறையில் மட்டும் இல்லாமல், பொதுவெளியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும் போது, அவற்றை எதிர்த்து குரல் கொடுப்பவராக இருக்கிறார். சின்மயி இவ்வாறு தைரியமாக களமாடுவது பலருக்கும் நம்பிக்கையை அளித்து வருகிறது.
இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் நடிகை ஒருவரின் மார்பிங் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்திருந்தனர். இதைப் பார்த்த சின்மயி தனது கண்டனங்களைத் தெரிவித்தது மட்டும் இல்லாமல், காவல்துறையை நேரடியாக டேக் செய்து புகாரும் அளித்தார். இதையடுத்து நடைபெற்ற சம்பவம் தான் சின்மயியை மேலும் ஆத்திரப்படுத்தி உள்ளது. அதாவது, சின்மயி காவல்துறையில் புகார் அளித்ததும், அந்த எக்ஸ் பக்கத்தில் சின்மயியின் மார்ஃபிங் மற்றும் ஏ.ஐ புகைப்படங்களைப் பகிர்ந்து, சின்மயியை மோசமாக விமர்சித்து கேப்ஷன் இட்டிருந்தார்கள்.
இதைப் பார்த்த சின்மயி அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்தார். மேலும், அந்த பதிவில், மிகவும் மோசமாக கமெண்ட் செய்தவர்களின் புகைப்படங்களையும் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்ட வீடியோவில் காட்டமாக பேசியும் அதில், தனது மார்ஃபிங் புகைப்படத்தை பகிர்ந்த எக்ஸ் பக்கம் மற்றும் மோசமாக கமெண்ட் செய்தவர்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

சின்மயி வீடியோ: அதாவது அந்த வீடியோவில், " பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பலருக்கும் உள்ளது. அப்படி அடங்கிப் போகாத பெண்களும் பெண் குழந்தைகளும் செத்துப் போகலாம் என்று பதிவிட்டுள்ளார்கள். இந்த ஆணாதிக்கவாதிகள் எப்போது, பெண்கள் அடங்கிப் போக வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கும் அவர்களை எதிர்த்து பேசும் பெண்களையும் அவர்கள் தொடர்ந்து ஏதாவது சித்தரித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
பயப்படக் கூடாது: உதாரணத்திற்கு முன்பெல்லாம் பேய், வசியம் செய்வபள் என்று எல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஏ.ஐ மூலம் மார்ஃபிங் புகைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த குரூர புத்தி கொண்ட ஆண்களுக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களைப் பார்த்து நாமோ, நமது குடும்பத்தினரோ பயப்படத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், நாம் தைரியமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரை தைரியப்படுத்த வேண்டும். இந்த அயோக்கியர்களுக்கு எதிராக தைரியமாக செயல்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவரது இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பலரும் அவர்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











