என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய்.. இறந்த மகளை நினைத்து சித்ரா உருக்கமான பதிவு!
சென்னை: பாடகி சித்ரா மறைந்த தன் மகளின் பிறந்தநாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடகி சித்ரா பாடி உள்ளார்.
ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

பாடகி சித்ரா: பாடகி சித்ரா மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் என்றாலும், அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது என்னமோ தமிழ் இசையுலகம் தான். இந்தியாவில் மிக அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்குரியவர். இந்திய சினிமாவில் இன்றளவும் வெற்றிகரமாகத் திகழ்ந்து வரும் பாடகி சித்ரா.
மகளை இழந்த சித்ரா: பாடகி சித்ரா, 1988ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு பல ஆண்டுகள் கழித்து, 2002-ம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆட்டிசம் பாதித்த தனது மகளை, சித்ரா எந்தவொரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வார். 2011ம் ஆண்டு ஏ ஆர் ரஹமான் நிகழ்ச்சி ஒன்றில் பாட துபாய் சென்றிருந்தபோது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நந்தனா உயிரிழந்தார்.
என் இதயத்தை துளைத்து விட்டு சென்றாய்: மனதில் நிறைய வலிகளோடு பாடகி சித்ரா, சினிமாவிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் பாடகி சித்ரா, உயிரிழந்த தனது மகளை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நீ என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா என்று குறிப்பிட்டு இருக்கிறார். சித்ராவின் இந்த பதிவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலர் சித்ராவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











