பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா?.. அதெல்லாம் வதந்தி.. மகன் சொன்ன சூப்பர் நியூஸ்
சென்னை: பாடகர் யேசுதாஸ் பல வருடங்களாக இசையுலகில் லெஜண்டாக இருப்பவர். யேசுதாஸ். சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என பல ஜானர்களில் தனது குரல் என்னும் கோலை கொண்டு ஆட்சி செய்பவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கும் அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்திருக்கிறார்.
ஒரு பாடலுக்கு இசை உயிர் என்றால் குரல் உடல். அந்த உடல் இருந்தால்தான் உயிரால் இந்த உலகில் நடமாட முடியும், பேச முடியும். அப்படி பல வருடங்களாக தனது குரலால் இசைக்கு தொண்டாற்றி வருகிறார் யேசுதாஸ். செவிகளுக்கு இதத்தை கொடுக்கக்கூடிய யேசுதாஸ் குரல் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் வல்லமை கொண்டவர். அதேபோல் எந்த ஜானரில் அவரை பாட வைத்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுவார். அதனாலேயே அவரை காந்த குரலோன் என்றும் பலரும் அழைப்பார்கள்.

கேரளத்து மன்னன்: யேசுதாஸ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். முதன்முதலாக ஜாதி பேதம் மத துவேஷம் என்ற பாடலின் மூலம் 1961ஆம் ஆண்டு அறிமுகமானார். முதல் பாடலே பல ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்தது. அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் அறிமுக பாடகர் பாடியது போல் அல்லாமல் ஏற்கனவே 100 பாடல்களை பாடியவர் பாடியது போல் பாடி ஆச்சரியப்படுத்தியிருப்பார் யேசுதாஸ்.
பல பாடல்கள் பாடிய யேசுதாஸ்: யேசுதாஸின் முதல் பாடல் மெகா ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்தன. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் தனது குரலால் அனைவரையும் ஈர்த்தார். மலையாளத்தில் மட்டும் பாடிக்கொண்டிருந்த அவர் தமிழில் பொம்மை படத்தின் பாடல்கள் மூலம் அறிமுகமானார். ஆனால் அவர் பாடியதில் பொம்மை படத்துக்கு முன்னதாகவே கொஞ்சும் குமரி படம் வெளியாகிவிட்டதால் அதுதான் யேசுதாஸ் தமிழில் அறிமுகமான படம் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக சிந்து பைரவி படத்தில் அத்தனை பாடல்களையும் அவ்வளவு அசால்ட்டாக பாடியிருப்பார் அவர்.
யேசுதாஸ் பெற்ற விருதுகள்: தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது குரலால் தடம் பதித்தவர் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி அழகுள்ள சலீனா, தீக்கனல், சஞ்சாரி, அபிநயம், பூச்ச சன்யாசி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். மேலும் 8 முறை தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார்.
எல்லாம் வதந்தி: இந்நிலையில் தற்போது கேரளாவில் வசித்துவரும் கே.ஜே.யேசுதாஸுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும்; அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவின. ஆனால் அதனை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்து; அது வெறும் வதந்தி; தனது தந்தை நலமுடன் இருக்கிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும் தற்போது அமெரிக்காவில் யேசுதாஸ் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











