டிவியில் இருந்து சினிமாவிற்கு திரும்பிய மனோ - சிபிராஜுக்காக வால்டரில் பாடினார்
சென்னை: பாடகர் மனோ நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பாடத் தொடங்கியுள்ளார். நடிகர் சிபிராஜ் நடிக்கும் வால்டர் படத்தில் அவருக்காக ஒரு பாடல் பாடும்போது எடுத்த போட்டோவை பாடலாசிரியர் அருண் பாரதி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்திய திரைப்படத் துறையின் ஏராளமான பாடகர்களில் ஒருவரான மனோ. பதினைந்து மொழிகளில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஒரு பாடகர் என்பதைத் தவிர, மனோ ஒரு பிரபலமான நடிகரும் கூட.

இவர் பிரபலமான பாடகராக இருந்தாலும், திரைப்படங்களில் நடிப்பதிலும் இவருக்கு அதீத ஆர்வம் உண்டு. இதனால் அவ்வப்போது திரைப்படங்களிலும் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து தனது நடிப்பு ஆசைக்கு தீனி போட்டு வருகிறார். கமல்ஹாசனுடன் இவர் நடித்த சிங்கார வேலன் படம் இவருக்கு நடிகர் என்ற அடையாளத்தை கொடுத்த முக்கியமான படமாகும்.
அதன் பின்பு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டு பாடுவதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இவருக்கு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. இதனையடுத்து பாடகர் மனோ 2013ஆம் ஆண்டு வெளியான வெற்றி செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதோடு பாடகர் மனோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
பாடகர் மனோ கடைசியாக விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் 'அக்கம் பக்கம் பார்' என்ற பாடல் பாடினார். அதன் பின் டிவி ஷோக்களில் அதிக கவனம் காட்டத் தொடங்கிவிட்டார். இன்றைக்கு பல பாடகர்கள் சினிமாவிற்கு வந்து விட்டதால் மனோ போன்ற பெரிய பாடகர்கள், பாடகிகள் எல்லாம் டிவி ஷோக்களில் நடுவராகிவிட்டனர்.
தற்போது மனோ சமீபத்தில் நடிகர் சிபிராஜின் வால்டர் திரைப்படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார். இதை அருண் பாரதி எழுதியுள்ளார். பாடல் பதிவு செய்யும் போது அதை ஃபோட்டோ எடுத்ததோடு, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார் அருண் பாரதி.
வால்டர் திரைப்படத்தில் சிபிராஜ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா திரைப்படத்தில் அறிமுகமான ஷிரின் காஞ்ச்வாலா நடிகர் சிபிராஜ்க்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி ஆகியோரும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். படக்குழுவினர் தங்கள் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
வால்டர் திரைப்படத்தை இயக்குனர் அன்பு எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபு திலக் 11:11 புரொடக்ஷன்ஸ் கீழ் தயாரிக்கிறார். வால்டர் வெற்றிவேல் படம் அப்பா சத்தியராஜ்க்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. மகன் சிபிராஜ்க்கு வால்டர் கை கொடுக்குமா பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











