சமந்தா, தமன்னாவுக்கு குரல் கொடுக்கும் பாடகிக்கு திருமணம்.. நேரில் வாழ்த்திய நடிகைகள்!
சென்னை : தமிழ் சினிமாவில் சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு குரல் கொடுத்து வரும் டப்பிங் ஆர்டிஸ்ட்டும், பிரபல பாடகியுமான எம்.எம்.மானசிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
எம்.எம்.மானசி, ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான 'பாகுபலி' படத்தில் தமன்னாவிற்கு டப்பிங் பேசி பிரபலம் ஆனார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.

நடிகை சமந்தாவிற்கு 'அஞ்சான்' படத்தில் குரல் கொடுத்துள்ள மானசி சமந்தாவின் நெருக்கமான தோழியாகவும் மாறிவிட்டார். அஜித்தின் 'ஆரம்பம்' படத்தில் இவர் பாடிய ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் ஹிட் ஆனது.
இளையராஜா இசையில் 'தாரை தப்பட்டை' படத்தில் மானஸி பாடிய 'ஆட்டக்காரி மாமன் பொண்ணு' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ராம்சரண், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ரங்கஸ்தலம்' படத்தில் மானசி பாடிய ரங்கம்மா மங்கம்மா பாடல் செம ஹிட் ஆனது.
இந்நிலையில் மானசிக்கு சென்னையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. டாக்டர் அபினேஷ் விஜயகுமார் என்பவரை திருமணம் செய்துள்ளார் மானசி. இந்த திருமணத்திற்கு நடிகைகள் தமன்னா, சமந்தா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துக் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











