மத்திய பிரதேசத்தில் ஒரு மதர் தெரசா! 3 ஆயிரம் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய பாடகி!
போபால்: சக மனிதன் இன்னலை சந்திக்கும்போது அவர்களைப் பார்த்து பரிதாபப்படும் மனிதர்கள் இங்கு ஏராளம். யாராவது அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும் என்று கூறுபவர்களும் இங்கு இருக்கிறார்கள், கண்டிப்பாக இவர் உங்களுக்கு உதவி செய்வார் இவரைச் சந்தித்து உங்களது பிரச்னையை கூறுங்கள் என்று கூறும் மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே கஷ்டப்படும் மனிதர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி உதவி செய்கிறார்கள்.
இதில் சாதாரண பொது மக்களாக இருந்து உதவி செய்பவர்கள் இருந்தாலும் திரை பிரபலங்கள் உதவி செய்யும்போது அது நேரடியாக ஊடகங்களில் செய்தியாகிறது. அவ்வாறு தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கி, தன்னிடம் உதவி என கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கும் கலக்கப்போவது யாரு பாலா போன்றவர்களால் தமிழ் நாட்டில் பயன் பெற்றோர் அதிகம். மறைந்த நடிகர் விஜயகாந்த் கூட தனது அலுவலகத்தில் பசி என்று வருபவர்கள் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டே இருந்துள்ளார்.

3000 குழந்தைகளுக்கு உதவி: இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பாலக் முச்சல் என்ற பாடகி ஒருவர் இதய கோளாறுகளால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்காக உதவி செய்து வருகிறார். இதுவரை ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாடும் மூன்றாயிரம் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி வழங்கி உதவியுள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த பாடகி தனது சிறு வயதிலிருந்து இந்த உதவிகளை செய்து வருகின்றார். பாலக்கின் கூற்றுப்படி தனது ஏழு வயதிலிருந்து அவர் இந்த உதவிகளை செய்து வருவதாக கூறுகிறார்.

ஒத்துழைக்கும் கணவர்: இது தொடர்பாக அவர் ஊடகங்களிடம் விரிவாக பேசுகையில், " திருமணத்திற்கு பிறகு எனது கணவர் மிதுனும் இணைந்து குழந்தைகளின் அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்து வருகிறார். மேலும் எனது கணவர் என்னை தொடர்ந்து பல குழந்தைகளுக்கு உதவி செய்ய உற்சாகமூட்டி வருகிறார்.

குறிப்பாக குழந்தைகளின் அறுவை சிகிச்சைகள் பற்றி எனது கணவரிடம் நான் உரையாடும் போது குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்டுவது அல்லது அந்த குழந்தைகள் உடல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துப் பேசும்போது எனது கணவர் நான் சொல்வதை முழு மனதோடு கேட்கிறார். இதுவே எனக்கு அவரிடம் இருந்து கிடைக்கும் மிகப்பெரிய ஒத்துழைப்பாக பார்க்கிறேன். மேலும் பாட்டுப்பாடி நான் எனது கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தை குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக செலவழிப்பதை எனது கணவர் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்.

413 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்: இதுவரை மூன்றாயிரம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இதனை நான் ஒரு மைல் கல்லாகவே கருதுகிறேன். எனது ஏழு வயதில் இந்த சேவையை நான் தொடங்கினேன். இந்த சேவையை தொடர்ந்து செய்வேன் என்று எனக்கு அப்போது தெரியாது. இன்னும் 413 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளும் போய்க் கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியாத குழந்தைகளுக்கு இது ஒரு உதவி. இந்த உதவியை செய்வதை எனது கடமையாக கருதுகிறேன். இந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவி செய்வதற்காகவே கடவுள் என்னை படைத்துள்ளார் என்று நினைக்கின்றேன், அந்த கடவுளுக்கு நன்றி" இவ்வாறு கூறினார். பாடகி பாலக் முச்சலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன், தொடர்ந்து குழந்தைகளுக்கு உதவிட உற்சாகமூட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











