இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை.. ஃபிலிம் ஃபேர் விருதினைப் பெற்ற ஸ்வேதா மோகன் உருக்கமான பதிவு!
திருவனந்தபுரம்: தமிழ்ப் பாடல்கள் மூலம் திரையுலகில் நுழைந்த மலையாளப் பாடகி ஸ்வேதா மோகன். இவர் தனது 9 வயதில் முதல் முறையாக பாடினார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாம்பே படத்தில் 'குச்சி குச்சி ராக்கம்மா' பாடலிலும் ஸ்வேதா கோரஸ் பாடியுள்ளார். தற்போது தென்னிந்திய திரை உலகின் முன்னணி பாடகிகளில் ஒருவராக உள்ள ஸ்வேதா மோகன் சமீபத்தில் தான் பெற்ற 11வது ஃபிலிம் ஃபேர் விருது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
69வது சவுத் பிலிம் ஃபேர் விருதுகள் சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. சிறந்த தெலுங்கு பின்னணி பாடகிக்கான விருதை ஸ்வேதா மோகன் பெற்றார். தெலுங்கில் வெளியான சார் திரைப்படத்தின் மாஸ்டெரு மாஸ்துரு பாடலுக்காக இந்த விருது கிடைத்தது. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் தெலுங்கு பதிப்பு சார். இந்த பாடல் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கவனம் பெற்றது. அந்தப் பாடலுக்காக ஸ்வேதாவுக்கு ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடரான நிலச்சரிவினால் மக்கள் தங்ளது உடமைகளை, வீடுகளை இழந்தது மட்டும் இல்லாமல், குடும்பம் குடும்பமாக மண்ணில் புதைந்து இறந்துள்ளனர். இந்நிலையில், இன்று 9வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பெரும் துயரச்சம்பவத்திற்கு மத்தியில் ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதால், கேரளாவைச் சேர்ந்த திரைக் கலைஞர்கள் மகிழ்ச்சி இல்லாமல் உள்ளனர் என்றே கூறலாம்.
தனுஷ்க்கு நன்றி: இந்நிலையில் ஸ்வேதா மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவும் அதையொட்டித்தான் உள்ளது. ஃபிலிம் ஃபேர் விருது பெற்ற ஸ்வேதா மோகன் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், " இது கொண்டாடுவதற்கான சரியான நேரம் கிடையாது. ஆனால் இந்த பதிவு மூலம் பலருக்கு நன்றி சொல்ல விரும்புகின்றேன். குறிப்பாக இந்த மதிப்பு மிக்க ஃபிலிம் ஃபேர் விருது எனக்கு கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள். குறிப்பாக மாஸ்டரு பாடலை மிகப்பெரிய ஹிட் பாடலாக மாற்றியதற்கு தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி. ஃபிலிம் ஃபேரின் ஜூரிகளுக்கு நன்றி. இந்த விருதினை இந்த பாடலை எனக்கு கொடுத்த தனுஷ் சாருக்கு அற்பணிக்கின்றேன். இந்த அற்புதமான பாடலில் எனது குரலைச் சேர்த்ததற்கு இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு நன்றி குறிப்பிட்டுள்ளார்.

மம்மூட்டி: அதேபோல் இந்த ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் கலந்து கொண்ட மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்ததற்காக விருதினைப் பெற்றுக்கொண்ட பின்னர் பேசினார். அப்போது, "இது எனக்கு 15வது ஃபிலிம் ஃபேர் விருது. இந்த விருது எனக்கு கிடைக்க காரணமான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் டெக்னீசியர்களுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் வயநாட்டில் நடந்துள்ள துயரச்சம்பவம் குறித்து தெரியும். பலர் தங்களது உயிரை இழந்துள்ளார்கள். மக்கள் தங்களது உறவினர்களை இழந்து பெரும் துயரத்தில் உள்ளார்கள். நீங்கள் அனைவரும் இந்த நேரத்தில் வயநாடு மக்களுக்காக துணை நிற்கவேண்டும். அந்த மக்கள் விரைவில் ஒரு சராசரி வாழ்வை வாழ நீங்கள் துணை நிற்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்" என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











