கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்!
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடைசி தருவாயில் இளையராஜாவுக்கு முத்தம் கொடுத்த நெகிழ்ச்சி தகவலை எம்ஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனக்கு வெரி வெரி மைல்ட் கொரோனாதான், விரைவில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் யாரும் கவலைப்பட வேண்டாம் என தெளிவாக பேசி வீடியோ வெளியிட்டார்.

சிகிச்சைப் பலனின்றி
அதனை பார்த்த ரசிகர்கள் எஸ்பிபி மீண்டு வந்து விடுவார் என நம்பினர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார். கொரோனாவில் இருந்து மீண்ட போதும் அதன் பின் விளைவுகளால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

மருத்துவர் தகவல்
அவரது மரணம் பலரையும் கலங்க வைத்துள்ளது. இன்னமும் அவரது ரசிகர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எஸ்பிபி குறித்த நினைவுகளை அவருக்கு நெருக்கமானவர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்பிபிக்கு நெருக்கமானவரும் அவருக்கு 52 நாட்கள் சிகிச்சை அளித்தவருமான தீபக் சுப்ரமணியம் மருத்துவமனையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

உருக்கமாக வீடியோ
அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபியின் உடல்நிலையில் அடுத்த சில நாட்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததார் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோ எஸ்பிபி மீண்டு வரவேண்டும் என உருக்கமாக வீடியோ வெளியிட்டனர்.

பாலு சீக்கிரம் வா
இசையமைப்பாளரும், எஸ்பிபியின் நண்பருமான இளையராஜா, பாலு சீக்கிரம் எழுந்து வா.. நான் உனக்காக காத்திருக்கிறேன் என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அவர் பேசிய வீடியோ பலரையும் கலங்க வைத்தது. எஸ்பிபி நலம் பெறவேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இதன் பலனாக அடுத்த சில நாட்களில் எஸ்பிபியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இளையராஜாவுக்கு முத்தம்
லவ் யூ ஆல் என எழுதும் அளவுக்கும் அவரது உடல் நிலை முன்னேற்றமடைந்தது. அப்போது எஸ்பிபியின் மகன் எஸ்பி சரண், இளையராஜா உருக்கமாக பேசிய வீடியோவை தனது போனில் காட்டியுள்ளார். அதனை பார்த்த எஸ்பிபி கண்கள் கலங்கி போனை அருகில் கொண்டு வரச்சொல்லி அதில் இருந்த இளையராஜாவை முத்தமிட்டுள்ளார்.

ஸ்தம்பித்த இளையராஜா
இந்த தகவலை மருத்துவர் தீபக் சுப்ரமணியம் தற்போது தெரிவிக்க, ஒட்டுமொத்த ரசிகர்களும் கலங்கி போயுள்ளனர். எஸ்பிபி மரணமடைந்த போதும் கூட இளையராஜா வீடியோ வெளியிட்டிருந்தார். சீக்கிரம் வா என்றேன் நீ கேட்கவில்லை, எங்க போன பாலு.. இங்க உலகமே சூனியமாயிடுச்சு.. பேச பேச்சு இல்லை சொல்ல வார்தையில்லை.. எல்லா துக்கத்துக்கும் அளவுண்டு.. இதுக்கு அளவே இல்லை என கூறி ஸ்தம்பித்து போனார்.

மோட்ச தீபம்
மேலும் எஸ்பிபிக்காக அவர் மரணித்த அடுத்த நாளே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று அவருக்காக மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா. எஸ்பிபி இளையராஜாவின் இசையில் தான் இதுவரை அதிகமான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











