Swagatha: மகிஷாசூரமர்த்தினியாக மாறப்போகிறேன்.. இசையமைப்பாளரை அம்பலப்படுத்த போகும் ஸ்வாகதா!
சென்னை: விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், காயல் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்களை பாடி பிரபலமானவர் தான் பாடகி ஸ்வாகதா. தமிழ் சினிமாவே வேண்டாம் என அவர் வெறுத்து ஒதுங்கி வட இந்தியாவுக்கு சென்று வாழ காரணமே ஒரு பிரபலமான இசையமைப்பாளர் கொடுத்த பாலியல் டார்ச்சர் தான் என சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்வாகதா போட்டு உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகளவில் சினிமா துறையில் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் வேலை பார்க்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுமைகள் அரங்கேறி வருவதை கண்கூடாக காண்கிறோம். அதிலும், சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட், காஸ்டிங் கோச் என ஏகப்பட்ட பாலியல் தொல்லைகள் தொடர்ந்து பல முன்னணி நடிகைகள் முதல் சின்னத்திரை பிரபலங்கள், பாடகிகள் என பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

பாடகி ஸ்வாகதா இதுவரை அந்த இசையமைப்பாளரின் பெயரை சொல்லாமல் இருக்கும் நிலையில், லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகிஷாசூரமர்த்தினியா மாறப்போறேன்: "நான் இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஏற்பட்ட அந்த கசப்பான சம்பவத்தில் இருந்து மீண்டு வரவும் என்னை குணப்படுத்தவும் பல போராட்டங்களையும் பல முயற்சிகளையும் செய்து வந்தேன். தற்போது முழுமையாக தேவியின் அருளால் போராட வேண்டிய பலத்தை பெற்றுள்ளேன். இதற்கு மேல் பொறுமையாக இருக்கப் போவதில்லை.
எனக்கு எதிராக கொடுமைகள் கொடுத்தவருக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சிகளை தொடங்கப் போகிறேன். இந்த தர்ம யுத்தத்தை நான் மகிஷாசூரமர்த்தனம் என்று சொல்ல விரும்புகிறேன். நீதி இன்னும் நிலுவையில் உள்ளது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளரை அம்பலப்படுத்தப் போகிறாரா?: இந்நிலையில், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளருக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தொடங்கப்போகிறார் என்பதே தெரிகிறது. பாடகி ஸ்வாகதாவுக்கு ஏற்கனவே ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாடகி ஸ்வாகதா அந்த இசையமைப்பாளருக்கு எப்படி பதிலடி கொடுக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. சிலர் இப்படியே மறைமுகமாக பேசாமல் அந்த மோசமான இசையமைப்பாளர் பெயரை வெளியிடுங்க எனக் கேள்விக் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications