S ஜானகி அம்மாவின் சாம்பலுக்கு முன் பாடல் பாடி இசை அஞ்சலி.. கண்ணீர் வர வைக்கும் வீடியோ
மைசூரூ: பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு இசை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பாடகர் வினோத் வேணுகோபால் பகிர்ந்த வீடியோவும், அதனுடன் அவர் எழுதியிருக்கும் உருக்கமான பதிவும் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
இன்டிபெண்டெண்ட் இசைக் கலைஞரும், பாடகருமான வினோத் வேணுகோபால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ஜானகி அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று, இன்னும் சாம்பல் அணையாத அந்த இடத்தின் முன்பு நின்றபடி, "தென்றல் வந்து என்னைத் தொடும்..." பாடலை அவர் உருக்கமாக பாடியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவுக்கு அவர் எழுதியிருக்கும் பதிவில், "ஒரு மாதத்திற்கு முன்பு ஜானகி அம்மாவின் வீட்டில், அவருக்கு அருகில் அமர்ந்து அவருக்காக பாட வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் விதி வேறு மாதிரியான துயரத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. கடுமையான வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்த சந்திப்புக்கு என்னால் செல்ல முடியவில்லை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அந்த தருணம் நிறைவேறாமல் போய்விட்டது.

ஜானகி அம்மாவின் சாம்பலுக்கு முன்: இன்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இன்னும் அந்த நெருப்பின் சூடு குறையாத அந்த இடத்தில், ஜானகி அம்மாவுக்காக அவருடைய சாம்பலுக்கு முன்னால் நான் நின்று பாட வேண்டிய நிலை ஏற்பட்டது. என் வாழ்க்கையில் இதைவிட மனதை உடைத்த தருணம் வேறு இல்லை. ஆனாலும் அந்த அமைதிக்குள் நான் பாடிய அந்த பாடல், அவருக்கு நான் செலுத்திய கடைசி மரியாதையாகவே பார்க்கிறேன். சில ஆசைகள் நிறைவேறாமல் போய்விடுகின்றன. சிலருக்கு நாம் செய்யவேண்டிய வழி அனுப்புதல் மிகவும் தாமதமாக வந்து சேர்கிறது. ஆனால் ஜானகி அம்மா மீது நான் வைத்திருக்கும் நன்றியும், மரியாதையும் என்றென்றும் மாறாது" என்றும் வினோத் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் சோகம்: இந்த பதிவு தற்போது இசை ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. "ஜானகி அம்மாவை நேரில் சந்திக்க முடியாத ஏக்கத்தை, ஒரு பாடல் மூலமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்" என்றும், "இந்த வீடியோவை பார்க்கும்போதே கண்கள் கலங்குகிறது" என்றும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் பாடகி ரேஷ்மியும் ஜானகி அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு முன் நின்று, மிகவும் உருக்கத்துடன், "காற்றில் எந்தன் கீதம் காணாத உயிரைத் தேடுதே" என்ற பாடலைப் பாடி இசை அஞ்சலி செலுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications