முற்றுகைப் போராட்ட அறிவிப்பு.. சென்னை தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது சிங்களப் படம்!
சென்னை: தமிழ் உணர்வாளர்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்பால், சென்னை தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது சிங்களப் படமான ஒப நாதுவா, ஒப ஏக்க (With you, with out you).
இலங்கையை சேர்ந்த பிரசன்ன வித்தனகே என்ற இயக்குனர் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தார். இது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது.

கதை
இது 2012-ம் ஆண்டு வெளியான படம். ஈழப்போருக்கு பின் நடக்கும் காதல் கதை. நாயகியின் பெயர் செல்வி. ஒரு முன்னாள் சிங்கள ராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணான செல்விக்குமிடையேயான காதல் கதை. இதில் தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தினர் கற்பழித்ததெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
தமிழில் இந்த படத்தை மொழி பெயர்த்து ராயப்பேட்டை அமைந்தகரையில் உள்ள 2 மல்டி பிளக்ஸ் தியேட்டரில் திரையிட திட்டமிட்டனர். ஆனால் இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. சென்னையில் திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் வற்புறுத்தின.

முற்றுகைப் போராட்டம்
தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்தவும் முயன்றன. இதுகுறித்த அறிவிப்பு வெளியானதுமே பரபரப்பானது.

நிறுத்தம்
இதையடுத்து இரு தியேட்டர்களிலும் இந்த சிங்களப் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் கூறும்போது, சில தமிழ் அமைப்புகள் போராட்டம் மற்றும் மிரட்டல் காரணமாக சென்னையில் படத்தை திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளோம் என்றனர்.

முதல்வருக்கு
இதற்கிடையில் படத்தின் இணை தயாரிப்பாளர் ராகுல்ராய், முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘வித்யூ வித் அவுட் யூ' படத்தை சென்னையில் 20-ந்தேதி முதல் திரையிட திட்டமிட்டு இருந்தோம். தியேட்டர் நிர்வாகத்துக்கு மிரட்டல் போன்கள் வந்ததால் படத்தை நிறுத்தியுள்ளோம்.

கொடுமைகளை சித்தரித்திருந்தோம்
இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை மற்றும் அநீதிகள் குறித்து விளக்ககூடிய வாக்கு மூலமாகவே இப்படத்தின் கதை அமைந்துள்ளது. எனவே படத்தை வெளியிட பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











