சிறை ஹீரோவின் அடுத்த படம் ‘ராவடி’ ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் ஓவராம்.. அக்ஷய் குமார், பேசில் காம்போ!
சென்னை: சிறை படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றிப் பெற்ற தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் S. S. லலித் குமார் தயாரிப்பில், பேசில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் 'ராவடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. சென்னை மற்றும் ஒகேனக்கலில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படக்குழு இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பேசில் ஜோசப், L. K. அக்ஷய் குமார் இணைந்து நடிக்கும் 'ராவடி', தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிறது. இதை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டன. ஒகேனக்கலின் இயற்கை அழகு, படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பரத் விக்ரமனும், கலை இயக்கத்தை P. S. ஹரிஹரனும் கவனிக்கின்றனர்.

காமெடி என்டர்டெய்னராக 'ராவடி'யை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இதன் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 'ராவடி' படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எடிட்டிங், பின்னணி இசை, VFX போன்ற பணிகள் வேகமாக நடக்கும் நிலையில், கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. கோடை வெளியீடு, ரசிகர்களுக்கு முழு நீள பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி அசத்தி வருகின்றனர். அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ் வரிசையில் அக்ஷய் குமாரும் வெற்றி நாயகனாக மாறியுள்ள நிலையில், பேசில் ஜோசப் உடன் இணைந்து அக்ஷய் நடித்துள்ள 'ராவடி' திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் ராவடி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











