சிறுத்தை படத்தில் நடித்த சிறுமியா இவங்க.. ஆளே மாறிட்டாங்க - அவர் கொடுத்த அட்டகாசமான பேட்டி
சென்னை: சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த பேபி ரக்ஷனா சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. 2006ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான விக்ரமார்குடு படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியிருந்தது. தமிழில் கார்த்தி, தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கவனம் ஈர்த்த பேபி ரக்ஷனா
2011ஆம் ஆண்டு வெளியான சிறுத்தை படம் தமிழில் மெகா ஹிட்டானது. இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் சிவா ஏராளமான படங்களை இயக்கிவிட்டாலும் அவர் இன்னமும் சிறுத்தை சிவா என்றே அழைக்கப்படுகிறார். அதேபோல் கார்த்திக்கும் இந்தப் படம் பக்கா கமர்ஷியல் ஹிட்டானது. ஆனால் அந்தப் படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது கார்த்தியின் மகளாக நடித்த பேபி ரக்ஷனா. அவரது க்யூட்டான முகமும், சுட்டித்தனமான நடிப்பும் ரசிக்கும்படி இருந்தன.

மணிரத்னம் படத்தில் நடித்த ரக்ஷனா
விளம்பர படங்களில் நடித்துவிட்டு சிறுத்தையில் அறிமுகமான பேபி ரக்ஷனா அடுத்ததாக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடித்தார். அதிலும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்த ஓகே கண்மணி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி மணிரத்னத்தின் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் ரக்ஷனா. தொடர்ந்து இலங்கை பிரச்னையை அடிப்படையாக வைத்து உருவான யாழ் படத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார். இதனையடுத்து நடிப்பில் ப்ரேக் எடுத்த அவர் படிப்பில் கவனம் செலுத்தினார்.

பேபி ரகஷனாவின் அட்டகாசமான பேட்டி
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் இருந்த ரக்ஷனா இப்போது 11ஆம் வகுப்பு முடித்துவிட்டு 12ஆம் வகுப்புக்கு செல்லவிருக்கிறார். இந்நிலையில் அவர் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், "நான் முதலில் விளம்பர படத்தில் நடித்தேன். அதை பார்த்த சிவா அங்கிள் சிறுத்தை படத்தில் நடிப்பதற்கு என்னை தேர்ந்தெடுத்தார். சிறுத்தை படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். நான் எஞ்சாய் செய்துதான் அதில் நடித்தேன். குறிப்பாக என்னை தொங்கவிடும் சீனில் நடிக்கும்போதெல்லாம் ரொம்பவே எஞ்சாய் செய்தேன்.

மணிரத்னம் படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது?
மணிரத்னம் சாரின் கடல் படத்தின் ஹீரோயினின் சிறு வயது கேரக்டரில் நடித்தேன். அதனைப் பார்த்துதான் மீண்டும் எனக்கு ஓகே கண்மணி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார்கள். துல்கர் சல்மான் சார் மிகவும் அன்பானவர். நான் விருப்பப்பட்டுத்தான் திரைப்படங்களில் நடித்தேன். யாரும் என்னை ஃபோர்ஸ் செய்யவில்லை.

கஷ்டப்பட்ட படம் யாழ்
யாழ் திரைப்படம் இலங்கை பிரச்னையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. அதுவரை நடித்த படங்களில் நான் எந்தவித கஷ்டமும் படவில்லை. ஆனால் யாழ் படம் அப்படி இல்லை. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன். அதேபோல் நீண்ட நாள்களாக அந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம்.

என்னிடம் வேலை வாங்குவது பெரிய வேலை
நான் ஒரு துறுதுறுவென இருக்கும் குழந்தை. எங்கேயாவது ஓடிக்கொண்டே இருப்பேன். என்னை பிடித்து ஒரு இடத்தில் வைத்து வேலை வாங்குவது என்பது மிகப்பெரிய வேலை. அந்த சமயத்தில் என்னை பார்த்துக்கொள்வது அம்மாவுக்கு மட்டும் இல்லை படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கும் பெரிய வேலைதான். இப்போது எனது கவனம் முழுவதும் படிப்பில் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











