Bala - நிம்மதியாக சாக விடுங்க.. கைவிரித்த டாக்டர்கள் - அதிர்ச்சி கிளப்பும் பாலா
திருவனந்தபுரம்: Bala (பாலா) தான் பிழைக்க மாட்டேன் என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டதாக பாலா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழில் சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித்துடன் வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் தவிர்த்து மற்ற படங்கள் ஹிட்டடித்தன. தற்போது அவர் சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படமானது மொத்தம் பத்து மொழிகளில் வெளியாகிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது.

சிறுத்தை சிவா தம்பி:
சிறுத்தை சிவாவுக்கு பாலா என்ற தம்பி இருக்கிறார். பாலாவும் சினிமாவில் இருக்கிறார். அவர் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அஜித்துடன் அவர் நடித்த வீரம் படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அப்படத்தில் அவர் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார். இவர் 2016ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அது விவாகரத்தில் முடிந்தது.
மருத்துவரை மணந்துகொண்ட பாலா:
முதல் திருமணம் முறிந்த பிறகு சில வருடங்களாக தனியாக இருந்த பாலா கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டுவிட்டதாக மலையாள ஊடகங்கள் அவ்வப்போது எழுதிவந்தன. ஆனால் அதுகுறித்து இரு தரப்பும் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்தது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட பாலா:
சூழல் இப்படி இருக்க பாலாவுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு உடல்நலம் பாதிப்பு உருவானது. கடந்த மார்ச் மாதம் கடுமையான இருமல் மற்றும் வயிற்று வலி காரணமாக கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது.
பாலாவுக்கு அறுவை சிகிச்சை:
இப்படிப்பட்ட சூழலில் அவரது இரண்டாவது வருட திருமண நாளுக்கு மருத்துவமனையில் வைத்து தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

பாலா பேட்டி:
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், "நான் பிழைக்க வாய்ப்பு ரொம்பவும் குறைவு என மருத்துவர்கள் கை விரித்துவிட்டார்கள். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும் பாலா பிழைப்பார் என்று சொல்ல முடியாது என என் அண்ணன் சிவா, சகோதரியிடம் மருத்துவர் கூறியிருக்கிறார். அதை கேட்டு அவர்கள் இருவரும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள்.
நிம்மதியாக சாக விடுவேன்:
என்ன டாக்டர் இப்படி சொல்கிறீர்கள். இதுவே உங்களின் சகோதரராக இருந்தால் என்ன செய்வீர்கள் என டாக்டரிடம் என் சகோதரி கேட்டிருக்கிறார். அவர் என் சகோதரராக இருந்தால் நிம்மதியாக சாகவிடுவேன் என கூறியிருக்கிறார். டாக்டர் கூறியதை கேட்டு என் சகோதரியும், அண்ணாவும் மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள். இனி நான் பிழைக்க மாட்டேன் என டாக்டர் சொன்னதை அடுத்து அறிக்கை வெளியிடக் கூட முடிவு செய்தார்கள்.
உடல்நிலை தேறியது:
ஆனால் டாக்டர் கை விரித்த சில மணிநேரத்தில் என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே அறுவை சிகிச்சை செய்வது என்று முடிவு செய்தார்கள். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அதன் பிறகு நான் உடல்நலம் தேறி பழைய பாலாவாக உங்கள் கண் முன்பு வந்து நிற்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்கள் மட்டும் அல்லாமல் என்னுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தவர்களும் வந்து பார்த்து சென்றது எனக்கு சந்தோஷமாக இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











