Kanguva Mistakes: கங்குவா படத்தில் சிறுத்தை சிவா எங்கெல்லாம் கோட்டை விட்டார்.. பாவம் சூர்யா!
சென்னை: தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்தே வரலாற்றுப் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. மற்ற மொழிகளிலும் வரலாற்றுப் படங்கள் சமீப காலமாக வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அதுபோன்ற முயற்சியில் ஈடுபட்ட சில படங்கள் தோல்விகளையும் சந்தித்துள்ளன. இந்நிலையில், இன்று வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் விமர்சன ரீதியாக நெகட்டிவ் கருத்துக்களை சம்பாதிக்க முக்கிய காரணமே படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா.
சிரித்துக் கொண்டே சூர்யா ரசிகர்களுக்கு இப்படியொரு மரண டார்ச்சர் கொடுப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. படம் மொத்தமே மோசமா? என்றால் அதுதான் இல்லை. படத்தில் வேலை செய்த அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர்.

ஆனால், சிறுத்தை சிவா மற்றவர்களிடம் எந்தளவுக்கு சிறப்பாக வேலை வாங்கினாரோ அதே வேலையை தன்னிடம் இருந்து அவர் வாங்கத் தவறியது தான் அவர் செய்த மிகப்பெரிய தவறு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கங்குவா படத்தின் முக்கிய பிழைகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
ஹாலிவுட் படங்களின் காப்பி: கங்குவா படத்தின் கதையே ராஜமெளலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தை போலத்தான் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என உருவாக்கப்பட்டுள்ளது. பவுன்ட்டி ஹண்டர் என கல்கி படத்தில் இடம்பெற்ற விஷயங்கள் திணிக்கப்பட்டுள்ளன. சூர்யா குதிரையில் வரும் தோற்றம் அவரது பீரியட் போர்ஷன் எல்லாம் பிரேவ் ஹார்ட் படத்தை நினைவூட்டுகிறது. மேலும், கப்பல் போர்ஷன் எல்லாம் 300 பருத்தி வீரர்கள் மற்றும் பைரேட்ஸ் ஆஃப் தி கேப்டன் படங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. நட்டி நட்ராஜின் தோற்றம் அப்படியே அபோகலிப்டா படத்தை நினைவுப்படுத்துகிறது. சூர்யா ப்ரீ கிளைமேக்ஸில் சோலோவாக சண்டையிடும் காட்சியும் அபோகலிப்டா படத்தில் இருந்து அப்படியே அந்த சேற்றை பூசிக்கொண்டு எதிரிகளை தாக்கும் காட்சிகள் உருவப்பட்டுள்ளன. அந்த சிறுவனுக்கு இருக்கும் சக்தி குறித்த கிளைமேக்ஸ் காட்சியில் எக்ஸ்மென் மேக்னட்டோ தான் நினைவுக்கு வருகிறது.
சுவாரஸ்யம் இல்லை: ஒரு புதிய உலகத்துக்கு ரசிகர்களை கொண்டு செல்வதும் அங்கே கதையை சரியாக செட் செய்துவிட்டு நிகழ்காலத்துக்கு வருவதுமாக இல்லாமல் ஆரம்பத்திலேயே பாட்டி நிலாவை பார்த்து கதை சொல்ல அப்படியே அங்கிருந்து தொடர்பே இல்லாமல் நிகழ்காலத்துக்கு வருவதும் மீண்டும் நடு நடுவே ஜம்ப் கட் போல இரண்டு காலத்துக்கும் செல்வதும் இரண்டு இடத்திலும் கதை மாந்தர்களை சரியாக ரசிகர்களிடம் கொண்டு சென்று கனெக்ட் செய்யாமல் மேம்போக்காக எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாமல் எடுத்து இருப்பது தான் கங்குவா படத்தின் பெரிய பிழையாக உள்ளது. பாபி தியோலை வெறித்தனமாக காட்டிவிட்டு அவரது மகன்கள் எல்லாம் பரிதாபமாக அடிவாங்கி சாவதும் பெண்களிடம் அடிபட்டு சாவதுமாக காட்டுவது எல்லாம் காலக்கொடுமை. கருங்காட்டில் ஒத்தை ஆளாக சூர்யா பாபி தியோலின் படையை காலி செய்ய, கப்பலில் இருந்துக் கொண்டு கருங்காடு உன்னோட இடம் நீ தில்லு இருந்தா என்னோட கப்பலுக்கு வாடான்னு சொல்வது எல்லாம் அனிமல் வில்லனுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.
சூர்யா பாவம்: சூர்யா பிரான்சிஸ் ஆக செம கூலாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அந்த லுக் செட்டானாலும் அந்த கேரக்டர் பெரிதாக செட்டாகவில்லை. கங்குவா கதாபாத்திரம் சூர்யாவுக்கு கச்சிதமாக பொருந்துகிறது. அவர் கண்களை உருட்டி மிரட்டி நடித்திருப்பதும், ஆதி நெருப்பே பாடலில் நாக்கை நீட்டிக்கொண்டு தெனாவட்டாக ஆடுவதும் என மிரட்டியிருக்கிறார். ஆனால், சூர்யாவுக்கு அடுத்து பெரிதாக அந்த போர்ஷனில் எந்தவொரு நடிகரின் நடிப்பும் ரசிகர்களை கவராமல் போவது தான் படத்தை ரசிகர்களும் விமர்சகர்களும் இந்தளவுக்கு கழுவி ஊற்றக் காரணமாக அமைந்துவிட்டது. கங்குவா மேக்கிங்கில் எந்தவொரு குறையும் சொல்ல முடியாது. சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் கொண்டு சூர்யா பாபி தியோலிடம் சண்டை போட முடியாமல் குழந்தையை காப்பாற்றும் இடத்தில் கூட கடலில் வரும் திமிங்கலங்களை பார்த்தால் அவ்வளவுதான் நம்மள முடிச்சி விட்டாய்ங்க போங்க என்று தான் சொல்லத்தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











