விறுவிறுப்படைந்த ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்.. ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. தற்போது தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக தனது 23ஆவது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியான சூழலில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. தற்போது படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதுதொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா. எஸ்.ஜே.சூர்யவிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம்தான் அஜித்தை ஆக்ஷன் படங்களில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. இதுவரை அஜித்தின் படங்களில் வந்த அவரது அறிமுக காட்சிகளில் தீனா படத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு.

டாப் இயக்குநர்: முதல் படம் மெகா ஹிட்டான பிறகு விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். முதல் படத்தில் கமர்ஷியலாக களமிறங்கிய முருகதாஸ் இரண்டாவது படத்தில் சமூக அக்கறையுடன் களமிறங்கினார். லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு பேராசியரை வைத்து கோலிவுட்டை கலக்கினார் முருகதாஸ். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக அதுவரை ஆக்ஷன் ஹீரோவாகவே வலம் வந்த விஜயகாந்த் அந்தப் படத்தில் பக்குவமாக அடக்கி வாசித்திருப்பார்.
முருகதாஸின் கஜினி: முதல் இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் முன்னணி இயக்குநராக மாறிவிட்டார் முருகதாஸ். தொடர்ந்து சூர்யாவை வைத்து அவர் இயக்கிய கஜினி படமும் மெகா ஹிட்டாக அந்தப் படம் ஹிந்தியில் ரீமேக்கானது. அமீர்கான் நடித்திருந்த கஜினி ஹிந்தி ரீமேக்கையும் முருகதாஸே இயக்கினார். பாலிவுட்டிலும் கஜினி ஹிட்டடிக்க இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார் முருகதாஸ். தொடர்ந்து அவர் தமிழில் இயக்கிய ஏழாம் அறிவு படமும் ஹிட்டானது.
துப்பாக்கி, கத்தி: விஜய் தொடர் தோல்விகளில் துவண்டிருந்தபோது அவருக்கு பக்கா கமர்ஷியல் ஹிட் கொடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி. அதுவரை விஜய்யை யாரும் அவ்வளவு ஸ்டைலிஷாக பார்த்ததில்லை என்ற பெயரை துப்பாக்கி பெற்றுக்கொடுத்தது. அதேபோல் விஜய்யுடன் இரண்டாவது முறை இணைந்த கத்தி படமும் மெகா ஹிட்டாக; மூன்றாவதாக இணைந்த சர்கார் அடிவாங்கியது. தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதில் ரஜினியின் தர்பாரும் அடக்கம்.
அடுத்த படம்: ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. கடந்த சில வருடங்களாகவே முருகதாஸ் ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார். முக்கியமாக ஒருகாலத்தில் எப்படிப்பட்ட இயக்குநராக இருந்தவர் இப்போது இப்படி தடுமாறிக்கொண்டிருக்கிறாரே என்று அவர் மீது ரசிகர்கள் பரிதாப பார்வையையும் வீச ஆரம்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடங்கிய ஷூட்டிங்: கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருக்கிறார் முருகதாஸ். சிவகார்த்திகேயனும் மாவீரன், அயலான் என தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்து ஃபார்மில் இருப்பதால் கண்டிப்பாக இந்தக் கூட்டணி பந்தயம் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் காட்சியை விளக்க ஹீரோ சிவகார்த்திகேயனும், ஹீரோயின் ருக்மினியும் மற்ற நடிகர்களும் ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயனின் லுக்கை பார்த்த ரசிகர்கள் அட எஸ்கே வேற மாதிரி இருக்காரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவி நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











