காமிராவுக்குப் பின் நடிக்கத் தெரியாதவர் சிவாஜி கணேசன்!- பிரபு
சென்னை: காமிராவுக்குப் பின் நடிக்கத் தெரியாதவர் அமரர் சிவாஜி கணேசன் என்று அவர் மகன் பிரபு கூறினார்.
சிவாஜிகணேசன் - சாவித்ரி ஆகிய இருவரும் அண்ணன் - தங்கையாக நடித்து, 1961-ம் ஆண்டில் திரைக்கு வந்த படம், 'பாசமலர்.' பீம்சிங் இயக்கிய இந்த படம் அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமாக அமைந்தது.

இசைக் காவியம்
கவியரசர் கண்ணதாசன் பாடல்களும் அதற்கு மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் அமைத்த இசையும் இறவாப் புகழுடன் திகழ்கின்றன.
மலர்ந்தும் மலராத, மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், வாராயோ தோழி வாராயோ, எங்களுக்கும் காலம் வரும் போன்ற பாடல்கள் இந்தத் தலைமுறையையும் பரவசப்படுத்தும் உன்னதம் மிக்கவை.

நவீன தொழில்நுட்பத்தில்
இந்த படத்தை இன்றைய காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி டி.ஐ. மற்றும் டி.டி.எஸ். போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு, சினிமாஸ்கோப்பில் (அகன்ற திரைப்படமாக) உருவாக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ‘பாசமலர்' படம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி திரைக்கு வருகிறது.

ட்ரைலர்
இந்த படத்தின் ‘ட்ரைலர்' வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. டிரைலரை சிவாஜிகணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, மகள் தேன்மொழி ஆகிய மூவரும் வெளியிட, ஜெமினிகணேசனின் மகள் கமலா செல்வராஜ், ஜெமினிகணேசன் - சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி, பீம்சிங்கின் மகள் சுசித்ரா ஆகிய மூவரும் பெற்றுக்கொண்டார்கள்.

தொடரும் ஆதரவு
பிரபு பேசுகையில், ‘‘அப்பாவின் உயிர் மூச்சு, நீங்கள் (ரசிகர்கள்) தான். அவருடைய உயிர் மூச்சு இந்த அரங்கம் முழுவதும் பரவியிருக்கிறது. அப்பா உயிருடன் இருந்தபோது, அவர் மீது அன்பு செலுத்தி, அவருக்கு ஆதரவாக இருந்தீர்கள். பிறகு என் மீது அன்பு செலுத்தி, எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். இப்போது, என் மகன் விக்ரம் பிரபு நடிக்க வந்து இருக்கிறான். அவன் மீதும் அன்பு செலுத்தி, ஆதரவாக இருக்கிறீர்கள்.

அப்பாவுக்காக...
நீங்கள் (ரசிகர்கள்) இருக்கும் வரை, நாங்கள் நன்றாக இருப்போம். அப்பாவின் ரசிகர்களை நாங்கள் உயிர் உள்ளவரை மறக்க மாட்டோம். என் மகன் நடித்த ‘கும்கி' படவிழாவில் அண்ணன் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசும்போது, சிவாஜிக்காகத்தான் விழாவுக்கு வந்ததாக குறிப்பிட்டார். அதேபோல் இங்கே அமர்ந்திருக்கிற ஒவ்வொருவரும் அப்பாவுக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்திருக்கிறீர்கள்.

நிஜத்தில் நடிக்கத் தெரியாதவர்
அப்பா (சிவாஜி)க்கு காமிரா முன்பு மட்டுமே நடிக்க தெரியும். காமிராவுக்கு பின்னால் நடிக்க தெரியாது,'' என்றார்.

ஆரூர்தாஸ்
விழாவில், ‘பாசமலர்' படத்தை தயாரித்த மோகன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், பின்னணி பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனாராணி, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், அவருடைய மகள் மதுவந்தி, பிலிம்நியூஸ் ஆனந்தன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.


Click it and Unblock the Notifications











