For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நடிகர் திலகத்திற்கு ஒரு நினைவாஞ்சலி

  By Manjula
  |

  சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 14 வது நினைவு தினம் இன்று, நடிப்பில் சிவாஜியைப் போல வரவேண்டும் என்று நேற்று கோடம்பாக்கத்தில் கால் வைத்த இளைஞர்களைக் கூட நினைக்க வைத்த பெருமைக்குரியவர் சிவாஜி கணேசன்.

  300 படங்களுக்கும் அதிகமாக நடித்து சுமார் 47 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் கொடிகட்டிப் பறந்தவர். சிவாஜி நடித்து முதலில் வெளிவந்த திரைப்படம் பராசக்தி இன்றளவும் அதன் வசனங்களுக்காக பேசப்படும் ஒரு படமாக மாறியுள்ளது.

  Sivaji Ganesan Memorial Day

  தேசிய விருது, பத்மபூஷன் விருது, செவாலியர் விருது, தாதா சாகேப் பால்கே விருது மற்றும் கலைமாமணி உட்பட ஏராளமான விருதுகளை வாங்கி இருக்கிறார். 2001 ம் ஆண்டில் சிவாஜி கணேசன் இறந்தபோது தமிழ்நாடே ஸ்தம்பித்தது.

  அந்த அளவிற்கு தமிழர்களின் வாழ்வில் இரண்டாகக் கலந்த பெருமைக்குரியவர் சிவாஜி கணேசன், அவரது நினைவு தினமான இன்று அவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த 5 திரைப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

  பராசக்தி

  சிவாஜி அவர்களின் நடிப்பில் 1952 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பராசக்தி, கடவுள் மறுப்புக் கொள்கைகளை அந்தக் காலத்திலேயே துணிச்சலாக எடுத்துக் கூறிய இந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக மாறியது. கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனங்களும் இன்றளவும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

  பராசக்தி படத்தில் இடம்பெற்ற " ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்" என்ற வசனம் தமிழின் தலைசிறந்த 10 வசனங்களில் இன்றளவும் முதலிடத்தில் உள்ளது.

  வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்

  1959 ம் ஆண்டு சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன், விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் படம் இது. படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த சிவாஜி தனது நடிப்பால் ரசிகர்களின் கண்முன்னே கட்டபொம்மனைக் கொண்டுவந்து நிறுத்தி இருந்தார்.

  Sivaji Ganesan Memorial Day

  மானம் கெட்டவனே

  இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.படத்தில் இடம்பெற்ற

  வரி, வட்டி, கிஸ்தி....யாரை கேட்கிறாய் வரி...எதற்கு கேட்கிறாய் வரி...வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது...உனக்கேன் கட்டவேண்டும் வரி...

  எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா?அல்லது கொஞ்சி விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள்அரைத்தாயா?

  மாமனா? மச்சானா/மானங்கெட்டவனே? என்ற வசனங்களைப் பார்க்காத கேட்காத தமிழர்கள் இல்லை என்றே சொல்லலாம், அவ்வளவு புகழ்பெற்ற வசனம் இது.

  Sivaji Ganesan Memorial Day

  தில்லானா மோகனாம்பாள்

  நடிகர் திலகம் சிவாஜியும், நாட்டியப்பேரொளி பத்மினியும் போட்டி போட்டு நடித்த திரைப்படம் இது. சிவாஜியின் நடிப்புத் திறமையை வெளிக் கொணர்ந்த படங்களில் இதுவும் ஒன்று, படத்தில் இடம்பெற்ற "நலந்தானா" மற்றும் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம்" என்ன போன்ற பாடல்கள் இன்றளவும் தமிழின் எவர்கிரீன் பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தப் படத்தின் தாக்கத்தில் வெளிவந்தத் திரைப்படம்தான் ரகுமான்- விந்தியா நடிப்பில் வெளிவந்த சங்கமம் திரைப்படம்.

  மனோகரா வசனங்கள்

  1954 ம் ஆண்டு வெளிவந்த மனோகரா திரைப்படம் கலைஞரின் எழுத்துத் திறமைக்கு மற்றுமொரு சான்றாக அமைந்தது, படத்தில் இடம்பெறும் தர்பார் வசனங்கள் மிகச் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

  மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சிவாஜியிடம் அவரது தாய் கண்ணாம்பா கூறுவார் இன்றளவும் புகழ்பெற்ற வசனமாக விளங்குகின்றது. படத்தில் எல்லோராலும் பாராட்டுப் பெற்ற தர்பார் மண்டப வசனங்கள்.

  மனோகரா தர்பார் மண்டப வசனங்கள்

  அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

  மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.

  அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

  மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

  அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!

  மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.

  இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?

  சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.

  அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.

  மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!

  அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

  மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!

  அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?

  மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.

  அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.

  மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!

  அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?

  மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"

  Sivaji Ganesan Memorial Day

  ராஜராஜசோழன்

  தஞ்சை தமிழ் மண்ணில் பிறந்த நடிகர் சிவாஜி உலகையே ஒரு குடைக்குக் கீழ் கொண்டுவந்த மாமன்னர் ராஜராஜசோழனாக, ராஜராஜசோழன் படத்தில் நடித்திருப்பார். வழக்கம் போல தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டார் இந்தப் படத்தில். 1973 ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற தூய வசனங்களும், பாடல்களும் பலரது பாராட்டைப் பெற்றவை.

  குறிப்பாக "ஏடு தந்தானடி தில்லையிலே" என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. 42 வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த இந்தத் திரைப்படம் சுமார் 1.2 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது.

  English summary
  Today Actor Sivaji Ganesan 14th Memorial Day.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X