SK 25: ரஜினிகாந்த்தின் மாஸ் போட்டோ.. சிவகார்த்திகேயன் 25 டைட்டிலுக்கு பில்டப் ஏத்தும் தயாரிப்பாளர்
சென்னை: சிவகார்த்திகேயன் கைகளில் உள்ள அடுத்தடுத்த படங்களின் வரிசையைப் பார்க்கும்போது அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர் செம பிசி என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான். இது மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயன் தற்போது தனது 24 மற்றும் 25 வது படங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் இவரது 25 வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது எக்ஸ் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவகார்த்திகேயனின் 25 வது படத்தினை சுதா கொங்காரா இயக்குகின்றார். இதுமட்டும் இல்லாமல், படத்தில் ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்து வருகின்றனர். படம் 1960 கால கட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தினைக் கொண்டது, எனவே படத்தின் மீது பெரும் ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து வருகின்றார். இந்தப் படம் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு 100வது படம் ஆகும்.

இந்தப் படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனவர், சூர்யா. அதன் பின்னர், சூர்யா சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். சூர்யா கமிட் ஆன போது, இந்தப் படத்தினை அவரது 2டி நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. சூர்யா நடிப்பதில் இருந்து விலகியதால், படத்தினை தயாரிப்பதில் இருந்தும் அவரது தயாரிப்பு நிறுவனம் வெளியேறியது. அதன் பின்னர் இயக்குநர் சுதா கொங்கரா, படத்தினை வேறு நடிகர்களைக் கொண்டு எடுக்கத் திட்டமிட்டார். அப்படித்தான் இந்தப் படத்திற்குள் சிவகார்த்திகேயனும், டான் பிக்சர்ஸ் நிறுவனமும் உள்ளே வந்தது. சூர்யா நடிக்க கமிட் ஆனபோது படத்திற்கு புறநானூறு என பெயர் சூட்டப்பட்டது. சூர்யா வெளியேறியதால், படத்தின் பெயரை மாற்ற படக்குழு முடிவெடுத்தது.

டைட்டில்: இதனால் படத்தின் டைட்டில் குறித்து திரை உலகில் பல தகவல்கள் உலா வந்தது. ஒரு தரப்பினர் படத்திற்கு 1965 என பெயர் வைக்க படக்குழு முடிவு எடுத்துள்ளதாகவும், ஒரு தரப்பினர் படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்க முடிவெடுத்து விட்டதாகவும் கூறி வந்தனர். தற்போது பெரும்பாலும் படத்திற்கு பராசக்தி என்ற பெயரைத்தான் படக்குழு தேர்வு செய்திருப்பதாக பேச்சுகள் தீவிரமாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் 25: நேற்றே அதாவது, ஜனவரி 28ஆம் தேதியே படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர். அப்படி இருக்கும்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியிடப்பட்டது. அதில், சிவகார்த்திகேயன் கையில் பெட்ரோல் குண்டுடன் நிற்கின்றார். இந்த போஸ்டருடன் படக்குழு தரப்பில் இருந்து, தீ பரவட்டும் எனவும் கேப்ஷன் இடப்பட்டிருந்தது. மேலும் இன்று மாலை 4 மணிக்கு படத்தின் டைட்டில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ரஜினிகாந்த்: படத்தின் டைட்டில், பராசக்தி தான் என கூறப்பட்டு வந்த நிலையில், விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில் படத்திற்கு தமிழில் சக்தி திருமகன் எனவும் மற்ற மொழிகளில் அதாவது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழியில் படத்திற்கு பராசக்தி எனவும் பெயரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படியான நிலையில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது எக்ஸ் பக்கத்தில் சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார்.

பராசக்தி: ஆகாஷ் பாஸ்கரன் பகிர்ந்துள்ள சிவாஜி படக் காட்சி புகைப்படத்தில் ரஜினிகாந்த், பராசக்தி ஹீரோடா.. பேரைக் கேட்டதும் சும்மா அதிருதுல்ல என வசனம் பேசுவார். ஆகாஷ் பாஸ்கரனின் இந்தப் பதிவின் மூலம் படத்தின் டைட்டில் பராசக்தி என்பது 100 சதவீதம் உறுதி ஆகிவிட்டதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். ஆனால் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் போது தான் படத்தின் டைட்டில் குறித்து தெரியவரும்.


Click it and Unblock the Notifications











