விஜய்யோடு நான் வேணும்னே போட்டி போடுவதாக சொல்றாங்க.. அந்த தகுதி எனக்கு இல்லை.. சிவகார்த்திகேயன் ஓபன்
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படம் பத்தாம் தேதியும் ரிலீஸாகவிருக்கின்றன. இதன் காரணமாக இந்தப் பொங்கல் விஜய் Vs சிவகார்த்திகேயன் என்ற நிலைமையை சந்தித்திருக்கிறது. இரண்டு பேரின் ரசிகர்களும் சோஷியல் மீடியாக்களில் இப்போதிருந்தே சண்டைகளை ஆரம்பித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தோடு சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார். இதுதான் தளபதியின் கடைசி படம் என்று சொல்லப்படுவதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு இப்போதிருந்தே முழு வீச்சில் தயாராகிவருகிறார்கள். ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படமானது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. முதல் சிங்கிளான தளபதி கச்சேரியில் மமிதா பைஜுவின் காஸ்ட்யூமை வைத்து இது அந்தப் படத்தின் ரீமேக்தான் என டீகோடும் செய்தார்கள் ரசிகர்கள். ஆனால் அப்படியே ரீமேக் செய்திருக்கமாட்டார்கள் என்ற கருத்தும் பரவலாக நிலவிவருகிறது.
ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸாகிறது. தேர்தலை மனதில் வைத்துதான் படத்தின் ரிலீஸை ஜனவரியில் ஃபிக்ஸ் செய்திருக்கிறார் விஜய் என திரைத்துறையினர் சொல்கிறார்கள். மேலும், படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்களும் இருக்கும் என்பதால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனநாயகனின் உதவியை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார் விஜய்.

பராசக்தி போட்டிக்கு: பொங்கலுக்கு சோலோவாக வந்து வசூல் வேட்டை நடத்திவிடும் என்று விஜய் ரசிகர்கள் கணக்கு போட்டிருந்த நிலையில்; சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ் ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து பத்தாம் தேதிக்கு வந்திருக்கிறது. இப்படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் ஒன் லைனே ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த மாணவர்கள் பற்றியது என்பதால்; படம் கண்டிப்பாக ரசிகர்களிடம் கனெக்ட் ஆகிவிடும் என்பது படக்குழுவின் கணிப்பு.
விஜய் Vs சிவகார்த்திகேயன்: இது ஒருபக்கம் இருக்க ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி வருவதால் விஜய் ரசிகர்களுக்கும், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இடையே சோஷியல் மீடியாவில் மோதல் வெடித்துள்ளது. கோட் படத்தில் துப்பாக்கி கொடுத்த விஜய்யையே எஸ்கே எதிர்க்கிறாரா? என விளாசிவருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்தப் போட்டியை ஏற்பாடு செய்ததே சிவகார்த்திகேயன்தான் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயனின் பேட்டி: இந்நிலையில் காக்கி சட்டை படம் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீஸானது. அதே வருடம் பிப்ரவரி 5ஆம் தேதி அஜித்தின் என்னை அறிந்தால் ரிலீஸானது. அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "விக்ரமின் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால் வரும்போது எங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. எனக்கு பெர்சனலாக, அஜித் படங்களுடனோ விஜய் படங்களுடனோ போட்டி போடும் எந்த நோக்கமும் இல்லை. ஏன் என்றால் அவர்களுடன் முதலில் போட்டி போட முடியாது.
அவர்கள் எல்லாம் பெரிய ஸ்டார்கள். எனக்கு நல்ல ரிலீஸ் தேதி, விடுமுறை நாள் கிடைத்தால் போது. நடைமுறையில் அவர்களுடன் போட்டியே போட முடியாது. நான் அவர்களுடன் போட்டிப்போடுகிறேன் என்று ஒருசிலர் சொல்கிறார்கள். எனக்கு அந்த ஐடியாவே இல்லை. அவர்களுடன் போட்டி போடும் தகுதியும், நம்பிக்கையும் எனக்கு இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











