சிவ கார்த்திகேயன் என்னை சந்திப்பதற்கு பயந்தார்... உதயநிதி கூறிய சுவாரசிய தகவல்
சென்னை: உதயநிதி தயாரித்து நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
உதயநிதி, கலையராசன், ஆரவ், நிதி அகர்வால் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தன்னை சந்திப்பதை சிவ கார்த்திகேயன் தவிர்த்து வந்ததாக உதயநிதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

விநியோகம்
படங்கள் தயாரிப்பதை விட விநியோகம் செய்வது எளிதான காரியம் என்பதால் விநியோகத்தில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறது ரெட் ஜெயிண்ட் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு பெயர் வைத்தது கிருத்திகாதான். காரணம், ரெட் ஜெயிண்ட் என்றால் சூரியன் என்று பொருள். ஆரம்பத்தில் மதராசபட்டினம், விண்ணைத்தாண்டி வருவாயா, மைனா போன்ற படங்களை விநியோகம் செய்தேன். மைனா திரைப்படத்தை பொருத்தவரை கமல் ஹாசன் அந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டு விழாவில் பேசியதுதான் படத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது.

இயக்குநர் கிருத்திகா
கிருத்திகா நிறைய கதைகள் எழுதுவார். அதனை வேறு இயக்குநர்களிடம் கொடுத்து இயக்கச் சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் கிருத்திகாவை இயக்குநர் ஆகச் சொல்லி ஊக்கமளித்தது இயக்குநர் மிஷ்கின்தான். அவர் மட்டுமின்றி எனது நண்பரும், தயாரிப்பாளருமான ஒய் நாட் சசியும் கிருத்திகாவை இயக்குநராகச் சொல்லி வணக்கம் சென்னை திரைப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கி வைத்தார். பின்புதான் நான் அதனை தயாரித்தேன். இப்போது பேப்பர் ராக்கெட் இரண்டாம் பாகத்தை இயக்க ஆயத்தமாக இருக்கிறார் கிருத்திகா.

சரியான கணிப்பு
பெரும்பாலும் தரமான படங்களைத்தான் தேர்வு செய்து விநியோகம் செய்கிறோம். சில சமயம் எனது கணிப்பு சரியாக இருக்கும். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கோப்ரா திரைப்படம் பார்த்தபோது அதனுடைய நீளம் அதிகமாக இருப்பதால் சற்று குறைக்க சொன்னேன். ஆனால் தயாரிப்பு தரப்பிலிருந்து அதனை செய்யவில்லை. பின்னர் படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்கள் வந்தவுடன் அவர்களே படத்தின் நீளத்தை குறைத்தார்கள்.

தவறும் கணிப்புகள்
சில சமயம் கணிப்பு தவறாகிவிடும். உதாரணத்திற்கு, டான் திரைப்படத்தை நண்பர்களுடன் பார்த்தபோது யாருக்குமே சிரிப்பு வரவில்லை. அதனால் படத்தின் நீளத்தை குறைக்கும்படி சிவாவிடம் கூறினேன். ஆனால் அவர் குறைக்கவில்லை. படம் வெளியாவதற்கு முன் எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும்,"நீளத்தை குறைத்துவிட்டீர்களா?" என்று நான் கேட்டுவிடுவேனோ என்ற பயத்தில் சிவா என்னை சந்திப்பதை தவிர்த்தார். ஆனால்,, படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. சில காட்சிகளுக்கு மக்கள் இருக்கையிலிருந்து எழுந்து கைதட்டி ரசித்தார்கள். அங்கு எனது கணிப்பு தவறியது என உதய் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











