Amaran Box Office: உலகளவில் முதல் நாளில் அமரன் படம் எத்தனை கோடி வசூல் செய்யும் தெரியுமா..?
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் நாளை தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகிறது. ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் நாளை வெளியாகின்றன.
தீபாவளி வெளியீட்டில் அதிக அளவில் திரையரங்குகளை சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், இன்னும் முதல் நாளுக்கான டிக்கெட் புக்கிங் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

இந்த தீபாவளிக்கு ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாத நிலையில் ஹவுஸ்ஃபுல் போர்டு பார்ப்பது கடினம் தான் என்கின்றனர். ஆனால், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தியேட்டர் வானங்களை குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமரன் பட்ஜெட்: பிக்பாஸ் நிகழ்ச்சி இயக்கி வந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் எனும் ராணுவ வீரரின் பயோபிக்காக உருவாகியுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. 80 முதல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அமரன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அமரன் முதல் நாள் வசூல் கணிப்பு: சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 8 முதல் 10 கோடி ரூபாய் வசூலை தீபாவளி அன்று வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் இந்த திரைப்படம் அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. டிக்கெட் புக்கிங்கில் மற்ற இரண்டு படங்களை விட அமரன் திரைப்படம் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
4 நாள் வசூல் எப்படி இருக்கும்?: தீபாவளி, அதனைத் தொடர்ந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் 60 முதல் 80 கோடி ரூபாய் வசூலை முதல் வாரத்தில் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு 150 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வேட்டையாட உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வந்தால் அமரன் திரைப்படம் தீபாவளி பந்தயத்தில் முதல் இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த தடவை மிஸ் ஆகாது: சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் 2022ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த ஆண்டு பொங்கலுக்கு அவர் நடித்த அயலான் திரைப்படமும் வெளியாகி வெற்றிப் பெறவில்லை. பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அமரன் திரைப்படம் நிச்சயம் மிஸ் ஆகாது என்றும் இந்த தீபாவளி நம்ம தீபாவளி தான் என்றும் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் உறுதியாக கூறியுள்ளார். அமரன் திரைப்படம் ராணுவ வீரர்களுக்கான சமர்ப்பணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











