Amaran Box Office Day 10: பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் அமரன்.. எகிறிய SKவின் மார்க்கெட் - விபரம்!
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். இப்படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பயோபிக் படம் ஆகும். இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படியான நிலையில் படம் 10 நாளில் எவ்வளவு வசூல் செய்ததது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஏற்கனவே கூறியதைப்போல் தமிழ்நாட்டினைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு படத்தினை எடுப்பதால், படத்தின் காட்சிகள் பெரும்பாலும், இந்திய ராணுவத் தளவாடங்களுக்கு நேரடியாகச் சென்று படத்தினைக் காட்சிப் படுத்தியுள்ளனர். இதற்காக இந்திய உள்துறை அமைச்சகத்திடம் படத்தின் கதையைக் ஒப்படைத்து, ஒப்புதல் பெற்று, படத்தின் படப்பிடிப்புகளை நடத்தியுள்ளனர்.

படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. குறிப்பாக சிவகார்த்திகேயன் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மும்பையில் துப்பாக்கிகளை கையால்வது தொடர்பாக உரிய பயிற்சி எடுத்துள்ளார். அதேபோல் படம் ரிலீஸ் ஆன பின்னர் அனைவரும் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் பாராட்டினர். குறிப்பாக நடிகை சாய் பல்லவியின் நடிப்பினை அனைவரும் பாராட்டினர். சாய் பல்லவி ஏற்று நடித்த இந்து ரெபேகா வர்ஹீஸே சாய் பல்லவியைப் பார்த்து என்னைப் பார்ப்பதைப்போல் இருப்பதாகக் கூறி பாராட்டினார்.
தீபாவளி ஹிட்: படம் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆனதால் படத்தின் வசூல் மீதும் பெரும் கவனம் குவிந்தது. தீபாவளிக்கு தமிழில் அமரன் படத்துடன் மொத்தம் 3 படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் வெற்றி பெற்றப் படம் என்றால் அது, அமரன் மட்டும்தான்.

முதல் நாள் வசூல்: அமரன் முதல் நாளே ரூபாய் 42.3 கோடிகளை அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. அதேபோல் படம் ரிலீஸ் ஆகி மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயன் படங்களிலேயே மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்த படமாக மாறியது. முதல் வசூலைப் பொறுத்தவரையில், சிவகார்த்திகேயன் படத்தில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாகவும் இது மாறியது.

பாக்ஸ் ஆபிஸ்: படம் வெளியாகி நேற்றுடன் அதாவது நவம்பர் 9ஆம் தேதியுடன் 10 நாட்கள் ஆகின்றது. இந்த 10 நாட்களில் உலகம் முழுவதும், படம் ரூபாய் 205 முதல் ரூபாய் 210 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவில் ரூபாய் 150 கோடிகள் முதல் ரூபாய் 160 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் வெளிநாடுகளில் ரூபாய் 45 கோடிகள் முதல் ரூபாய் 55 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. படத்தின் வசூல் ரூபாய் 200 கோடிகளைக் கடந்து விட்டதால், படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று வார இறுதி என்பதால் படத்தின் வசூல் இன்றும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











