Madharaasi: சிவகார்த்திகேயன் படம்னு குழந்தைகளோட போய்டாதீங்க.. சென்சார் போர்டு பளிச் ரிப்போர்ட்!
சென்னை: சிவகார்த்திகேயனும் ஏ.ஆர். முருகதாஸும் இணைந்து பணியாற்றும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த கேள்வி, இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமா என்பதுதான். ஆனால் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸோ இது துப்பாக்கி பார்ட் 2 இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதன் பின்னர் படத்தின் பெயர் மதராஸி என அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ரசிகர்கள் அமைதி ஆனார்கள். படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் போர்டின் சான்றிதழ் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் அவருக்கு மவுசு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மதராஸி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கதை: இந்த படத்தின் கதை காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது என படம் தொடர்பான புரோமோஷன் பேட்டியின் போது கூறினார். அதேபோல் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக டிரைலரில் இடம் பெற்றுள்ள வசனமான துப்பாக்கி யார் கையில் இருந்தாலும் வில்லன் நான் தான் என வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வித்யூத் ஜம்வால் கூறியது பலரது கவனத்தை ஈர்த்தது. காரணம் அவர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
குழந்தைகளுடன் போக முடியாது: அதேபோல் படத்தில் இளம் நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். அதேபோல் மலையாள நடிகர் பிஜு மேனன், ஷாபீர் மற்றும் விக்ராந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது படம் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ள படமாகத் தெரிகிறது. இந்நிலையில் படத்தின் சென்சார் போர்டு வழங்கிய சான்றிதழ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் யூ/ ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 16 வயதுக்கு மேட்பட்டோர்கள் தான் பார்க்க தகுதியான படம் என சென்சார் போர்டு சார்பில் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரன்னிங் டைம்: இது மட்டும் இல்லாமல், படத்தின் ரன்னிங் டைமும் குறிப்பிடப்பட்டுள்ளது. படம் மொத்தம் 167 நிமிடங்கள், 33 நொடிகள் ஓடுகிறது. அதாவது இரண்டு மணி நேரம் 47 நிமிடம் 33 நொடிகள். படம் இரண்டே முக்கால் மணி நேர படம் என்பதால் படம் மிகப்பெரிய படம் என்பது நன்றாகவே புலப்படுகிறது. சமீப காலமாக மூன்று மணி நேரங்களுக்கு சற்று ஏறக்குறைய ஓடும் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கி வருகிறது. அப்படி இருக்கையில் மதராஸி படம் எந்த அளவுக்கு விமர்சனங்களைப் பெறும் என்பது குறித்து காத்திருந்து தான் பார்க்க வேண்டும். சிவகார்த்திகேயன் படம் என்றாலே சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை தியேட்டருக்கு படை எடுப்பார்கள். ஆனால் இந்த படத்திற்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும் என்பதால், ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











