எனக்கு வாழ்க்கை கொடுத்தார்களா?.. அப்படிப்பட்ட ஆள் நான் இல்ல.. தனுஷை தாக்கினாரா சிவகார்த்திகேயன்?
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்துவருகிறார். இப்போது அவர் சூரியை வைத்து கொட்டுக்காளி படத்தை தயாரித்திருக்கிறார். அந்தப் படத்தை கூழாங்கல் படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் பேசிய ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. சின்னத்திரையில் தோன்றி பிறகு வெள்ளித்திரைக்கு வந்து; இப்போது பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக கலக்கிவருகிறார் எஸ்கே. விஜய் எப்படி தான் வளர்ந்து வந்த காலத்தில் சிறுவர்கள், சிறுமிகள், குடும்பத்தினரை தன்னுடைய ரசிகர்களாக மாற்றிக்காட்டினாரோ அதேபோல் சிவாவும் இருக்கிறார். இதன் காரணமாகவே சிவகார்த்திகேயன்தான் அடுத்த தளபதி விஜய் என்று அவரது ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

சர்ச்சைகள்: ஒருபக்கம் சிவகார்த்திகேயன் வளர்ச்சி அபாரமாக இருந்தாலும் அவரை சுற்றி அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுவதும் வழக்கமாக மாறியிருக்கிறது. க்ளீன் பாய் என்ற இமேஜோடு வலம் வந்த அவர் மீது இசையமைப்பாளர் டி.இமான் வைத்த ஒரு குற்றச்சாட்டு பெரும் பேசுபொருளாக மாறியது. ஆனால் சிவா மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்று ஒருதரப்பினர் தொடர்ந்து கூறிவர; எஸ்கேவோ அந்த விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தனுஷோடு பிரச்னை: அதேபோல் சிவகார்த்திகேயன் ஹீரோவாக மெரீனா படத்தில் அறிமுகமானாலும்; அவரை நடிகராக 3 படத்தில் அறிமுகப்படுத்தியது தனுஷ்தான். மேலும் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் படத்தையும் தயாரித்திருந்தார். இதன் காரணமாக இரண்டு பேருக்குமே நல்ல நட்பு ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இடையில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று இருவரும் அவ்வப்போது பேசிவந்தனர்.
அயலான் Vs கேப்டன் மில்லர்: சூழல் இப்படி இருக்க கடந்த பொங்கலுக்கு அயலான் படமும், கேப்டன் மில்லர் படமும் வெளியாகின. இதில் கேப்டன் மில்லரை விடவும் அயலான் படம் ரசிகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து தனக்கு வாழ்க்கை கொடுத்த தனுஷையே அடித்து காலி செய்துவிட்டாரே சிவகார்த்திகேயன் என்று ஒரு பேச்சு சத்தமாக எழுந்தது. இந்தச் சூழலில் கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் விஷயம் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
சிவாவின் பேச்சு: அந்த விழாவில் பேசிய அவர், "யாரையும் கண்டுபிடித்து; இவருக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்; நான்தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிவிட்டார்கள். அப்படிப்பட்ட ஆள் எல்லாம் நான் இல்லை. இதோ எனது நண்பர் இவர்தான் என்று ஒரு அறிமுகம் செய்வோம் இல்லையா. அப்படித்தான் இதனை நான் செய்கிறேன். நீங்கள் கொடுத்த நடிகர் என்ற இடத்திலிருந்து அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.
தனுஷ் மீது தாக்கு: சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சை கேட்ட ரசிகர்கள் தனுஷை மறைமுகமாக தாக்கி பேசுகிறாரா சிவா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதுமட்டுமின்றி சிவாவின் இந்தப் பேச்சின் மூலம் அவருக்கும், தனுஷுக்கும் ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் அடித்து கூறிவருகிறார். மேலும் சிலரோ சிவா தனுஷை சொல்லவில்லை; அவர் பணியாற்றிய தொலைக்காட்சியைத்தான் சொல்கிறார் என்றும் கூறுகிறார்கள். எது எப்படியோ; சிவா ஏன் அப்படி பேசினார் என்பது அவருக்கே வெளிச்சம். சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்ததாக அமரன் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











