ஆண் குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்.. அப்பாவே மகனாகப் பிறந்ததாக உருக்கம்
சென்னை : நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், டிவி பிரபலம் என பல திறமைகளை கொண்டவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவி.,யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை துவங்கியவர்.
Recommended Video
மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு 2013 ல் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப் பெரிய பெயர், புகழை பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஹீரோக்கள் பட்டியலில் இணைந்தார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. தற்போது டான், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கனா படத்தின் மூலம் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன், தற்போது தான் நடிக்கும் டாக்டர், டான் படங்களையும் தயாரித்து வருகிறார்.

விஜய்க்கு பாட்டெழுதிய சிவகார்த்திகேயன்
கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடலை எழுதி பாடலாசிரியராகவும் தனது திறமையை காட்டிய சிவகார்த்திகேயன், தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்யின் இன்ட்ரோ பாடலையும் எழுதி உள்ளார். இதுவரை சிவகார்த்திகேயன் எழுதிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி உள்ளது.

வாயாடி பெத்த புள்ள
போலீஸ் குடும்பத்தில் பிறந்த சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். இவர் கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி ஏற்கனவே தமிழக ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டார். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தைக்கு தந்தையானார்
இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், தன் மகன் தனது கைகளை பிடித்திருப்பது போலவும், அதன் பின்புறம் சிவகார்த்திகேயனின் அப்பாவின் ஃபோட்டோ இருப்பது போன்ற ஃபோட்டோவையும் பதிவிட்டுள்ளார். அத்துடன் உருக்கமான பதிவு ஒன்றையும் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் விரல் பிடித்த அப்பா
சிவகார்த்திகேயன் தனது பதிவில், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக...என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் என குறிப்பிட்டுள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்
சிவகார்த்திகேயனின் இந்த பதிவிற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு அவரது ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications