தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் நண்பர்... யாருக்கு இந்த ஸ்கெட்ச்?
சென்னை: தனுஷின் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதம் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஜூலையில் டீசரும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் இணைந்துள்ளாராம்.

தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் நண்பர்: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வாத்தி திரைப்படம் வெளியாகியிருந்தது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீஸான வாத்தி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூலித்தது.
இதனால் தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்துக்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ரெட்ரோ ஸ்டைலில் பீரியட் ஆக்ஷன் ஜானர் படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் மூலம் கோலிவுட் ரசிகர்களை மிரள வைத்த அருண் மாதேஸ்வரன், கேப்டன் மில்லரில் இன்னும் தரமான சம்பவம் செய்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் டீசர் வெளியாகவுள்ளதாம். இந்நிலையியில், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நண்பர் அருண்ராஜா காமராஜ் இணைந்துள்ளாராம். சிவகார்த்திகேயனும் அருண்ராஜா காமராஜும் ஒரே கல்லூரியில் படித்து ஒன்றாக திரையுலகில் அறிமுகமானவர்கள். அருண்ராஜாவுக்காக தயாரிப்பாளராகவும் மாறினார் சிவகார்த்திகேயன்.
அதேநேரம் சிவகார்த்திகேயனின் ஆரம்பகாலத்தில் அவருக்கு பெரிய சப்போர்ட்டாக இருந்தது தனுஷ் தான். தனது இயக்கிய 3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கேரக்டர் கொடுத்திருந்தார் தனுஷ். அதன்பின்னர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த எதிர் நீச்சல் படத்தை அவருக்காகவே தயாரித்தார் தனுஷ். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லை.

இந்த சூழலில் தனுஷுக்காக பாடல் எழுத அருண்ராஜா காமராஜ் ஓக்கே சொன்னது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண்ராஜா சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பது தனுஷுக்கும் நன்றாகவே தெரியும். இருப்பினும் அருண்ராஜாவை வரவைத்து கேப்டன் மில்லர் படத்தின் ஓப்பனிங் சாங்கை எழுத வைத்துள்ளனர் தனுஷும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும். இந்தப் பாடல் தான் தனுஷின் ஓப்பனிங் பாடல் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தென்காசி பகுதிகளில் நடைபெற்று வந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடக்கிறதாம். இந்த ஷெட்யூலும் விரைவில் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் இரண்டும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால், கேப்டன் மில்லர் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் டீசரில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











