Sivakarthikeyan: கமல் பதிலுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன்.. SK 21 நிலைமை இப்படி ஆயிடுச்சே..?
சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் அவர் தனது 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்கே 21 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில், கமலின் முக்கியமானதொரு பதிலுக்காக சிவகார்த்திகேயனும் எஸ்கே படக்குழுவும் காத்திருக்கிறது.
கமல் பதிலுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் கடந்த வாரம் 12ம் தேதி ரிலீஸானது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் அயலான் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் உற்சாகமாக காணப்படுகிறார். இந்நிலையில் அவரது 21வது படத்தில் இருந்து சில அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்கே 21 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைகிறார். இந்நிலையில் எஸ்கே 21 படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அப்போது படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதன்படி அடுத்த மாதம் (பிப் 17) எஸ்கே டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனுடன் கமல்ஹாசனையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இது கேமியோ அல்லது முக்கியமான ரோலாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி கமலிடம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், கமல் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறாராம்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க கமல் ஓக்கே சொல்லும் பட்சத்தில் எஸ்கே 21ல் தரமான சம்பவம் அரங்கேறும் எனலாம். லோகேஷ் இயக்கவுள்ள தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கமலுடனும் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கலாம் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. கமலின் பதிலுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











