Madharaasi Blue Sattai Maran Review: SKவின் மதராஸி சரியான பொம்மை துப்பாக்கி.. ப்ளூ சட்டை மாறன் பளிச் விமர்சனம்
சென்னை: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி, சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன், வித்யூ ஜமால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் மதராஸி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ள விமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் தொடக்கத்தில் அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் ஆயுத கலாச்சாரத்தைக் கொண்டு வர ஒரு குழு முயற்சிக்கிறது. இதை எப்படியே தெரிந்து கொண்ட என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர், அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். அதையும் கடந்து அந்த ஆயுதங்கள் தமிழ்நாட்டிற்குள் வந்துவிடுகிறது. இந்த ஆயுதங்களை அழித்தொழிக்க வேண்டும் என்றால், ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினால் தான் முடியும் என அந்த அதிகாரி முடிவு செய்கிறார்.

இந்த சமயத்தில் படத்தின் கதாநாயகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். இதைப் பார்த்த அந்த அதிகாரி, தனது குழுவில் இருப்பவரை இழப்பதற்கு பதிலாக கதாநாயகனை தற்கொலைப் படையாக மாற்றிவிடலாம் என்று முயற்சி செய்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை.
கஜினி + துப்பாக்கி: இந்த படத்தை பார்க்கும்போதே கஜினி மற்றும் துப்பாக்கி படத்தை மிக்ஸ் செய்து ஒரு படம் எடுத்தது போல இருந்தது. இது போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு துப்பாக்கி படத்தைப் போல இருக்க வேண்டும். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சிக்கு தியேட்டரே அதிரும் அளவுக்கு ஆரவாரம் இருந்தது. ஆனால் இந்த படத்தில் இடைவேளையில் படமே முடிந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதை உள்ளது. கதாநாயகன் எதற்காக தற்கொலை செய்து கொள்வாரோ, அந்த வேலையும் முடிந்து விடும். என்.ஐ.ஏ அதிகாரி கதாநாயகனையும் கதாநாயகியையும் ஒரு வேலை செய்யச் சொல்வார், அதை மட்டும் ஒழுங்காக செய்திருந்தால் படம் அங்கேயே முடிந்திருக்கும்.

சொதப்பல்: படத்தை அங்கேயே முடிக்காமல், இரண்டாம் பாதியில் சரியான கதையும் திரைக்கதையும் இல்லாமல் இழு இழு என்று இழுத்து விட்டார்கள், இதனால் படம் சுமாரான படமாக மாறிவிட்டது. படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் நன்றாக இருந்தது. கதாநாயகன் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு புரிய வைக்கும் விதமும் நன்றாக இருந்தது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் எல்லாமே நன்றாக இருந்தது. கதாநாயகனுக்கு ஒரு ப்ளாஸ் பேக் இருக்கிறது, அது ஒர்க் ஆகவே இல்லை.
பாராட்டு: படத்தில் எல்லா சண்டைக் காட்சிகளும் நன்றாக இருந்தது. குறிப்பாக வித்யூ ஜமாலின் சண்டைகள் காட்சிகள் வெகு சிறப்பு. தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வரப் பார்க்கிறார்கள் என்று சொல்லி பயமுறுத்தி படத்தை தொடங்கிவிட்டு, இவர்கள் கொண்டு வந்த துப்பாக்கியை வைத்து சுட்டால், கதாநாயகனும் சாகல, கதாநாயகியும் சாகல, வில்லனும் சாகல எல்லோரும் அடுத்த காட்சியிலேயே எழுந்து வந்துவிடுகிறார்கள். இந்த துப்பாக்கியை எதுக்கு விற்பனை செய்ய வந்தார்கள் என்று தெரியவில்லை. பொம்மை துப்பாக்கி என்று விற்க அனுமதித்து இருக்கலாம். இப்படி ஒரு படமும் எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது" என்று தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











