Madharaasi Bayilvan Review: மதராஸி எப்படி இருக்கு? பயில்வான் ரங்கநாதன் பளிச்சுனு சொல்லிட்டாரு!
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி, சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூ ஜமால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மதராஸி. படம் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் படம் பார்த்த பயில்வான் ரங்கநாதன் படம் எப்படி உள்ளது என்று தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் கதையை பொறுத்தவரையில் துப்பாக்கி கடத்தும் வில்லனாக வித்யூ ஜமால் மற்றும் டான்சிங் ரோஸ் உள்ளார்கள். விக்ராந்த் மற்றும் பிஜு மேனன் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களாக நடித்துள்ளார்கள். ஆயுதங்கள் கடத்தும் கும்பலுக்கும் தேசிய பாதுகாப்பு படைக்கும் இடையில் நடக்கும் மோதலில் கதாநாயகி ருக்மினி வசந்தின் குடும்பம் மாட்டிக் கொள்கிறது. அவர்களைக் காப்பாற்ற சிவகார்த்திகேயன் முயற்சிக்கிறார். இதுதான் படத்தின் கதை. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சற்று மனநிலை மாறுபட்டவராக நடித்துள்ளார். அவரிடம் சிறப்பான நடிப்பை ஏ.ஆர். முருகதாஸ் வாங்கியுள்ளார்.

பிஜு மேனன் மற்றும் விக்ராந்த் என்.ஐ.ஏ அதிகாரிகளாக கச்சிதமாக பொருந்தியுள்ளார்கள். வித்யூ ஜமால் மற்றும் டான்சிங் ரோஸ் வில்லன் கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தியுள்ளார்கள். ருக்மினி வசந்த் சிறப்பாக நடித்துள்ளார். அவர் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். படத்தின் திரைக்கதையை பொறுத்தவரையில் வில்லன் கதாபாத்திரத்தை போலவே பிஜு மேனன் கதாபாத்திரத்தை கொண்டு சென்றுள்ளார்கள், அது நன்றாக உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு சிவகார்த்திகேயன் தவிக்கிறார்.
ஆக்ஷன்: ரமணா படத்தைப் போலவே சிவகார்த்திகேயனும் வித்யூ ஜமாலும் க்ளைமேக்ஸில் பேசிக்கொள்ளும் வசனங்கள் சிறப்பாக உள்ளது. தான் ஆக்ஷன் கதாநாயகன் என்பதை இந்த படத்தின் மூலம் நீருபித்துள்ளார் சிவகார்த்திகேயன். இனி வரும் அவரது படங்களில் எப்படியும் அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். பொதுவாகவே சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் குழந்தைகளை மையப்படுத்திய படங்களாக இருக்கும். ஆனால் இந்த படம் அதிகப்படியான சண்டைக் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது. அதேநேரத்தில் குடும்பமாக அமர்ந்து பார்க்கும் படியான ஆக்ஷன் மசாலா படமாக இந்த படம் உள்ளது.
மொத்தத்தில் படம்: சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மினி வசந்த்க்கு இடையில் காதல் காட்சிகள் சிறப்பாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. காதல் காட்சிகளில் சிவகார்த்திகேயனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக படத்துக்கு உதவியுள்ளது. அனிருத் சிறப்பாக உழைத்துள்ளார். மற்ற படங்களைப் போல் இல்லாமல், இந்த படத்தில் காப்பி அடிக்காமல் பாடல்களை உருவாக்கியுள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டும் நன்றாக உள்ளது. தனது தோல்விகளில் இருந்து வீறு கொண்டு எழுந்து வந்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். அரசியல் கருத்துள்ள படத்தை கொடுத்துள்ளார். பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தைக் கொடுத்துள்ளார். படம் எனக்கு முழுமையாக பிடித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











