கிங்காங் வீட்டுக்குப் போன S.K.. நீங்களும் நானும் ஒன்னு சிவா.. உணர்ச்சிவசப்பட்ட கிங்காங்!
சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிரபலமான நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 10, 2025 அன்று காலை, பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் கீர்த்தனா மற்றும் நவீன் ஆகியோரின் திருமணம் எளிமையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அதே நாள் மாலை அசோக் நகரில் உள்ள MPK மஹாலில் பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கிங் காங் வீட்டிற்குச் சென்று மணமக்களை வாழ்த்தி உள்ளார்.
கிங்காங், தனது மகளின் திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றுவதற்காக பல முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார். ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி, கன்னட நடிகர் சிவராஜ்குமார், மற்றும் அரசியல் தலைவர்களான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்த அழைப்பிதழ் வழங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தனி கவனம் பெற்றது..
திருமணம் கோவிலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடைபெற்றது. நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, கயல் தேவராஜ் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மாலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் விஷால், கார்த்தி, டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிங் காங் வருத்தம்: திருமணத்திற்கு பிறகு, கிங்காங் ஒரு வீடியோ மூலம் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினார். சிலர் தனது மகளின் திருமணத்திற்கு பிரபலங்களை அழைத்தது பணத்திற்காக என்று விமர்சித்ததாகவும், ஆனால் தனது மகளின் திருமணத்தை பெருமையாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அழைப்பிதழ் வழங்கியதாகவும் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்தியது குறித்து "நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு வந்தார். இதை எங்க குடும்பம் மறக்காது," என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
சிவகார்த்திகேயன்: கீர்த்தனா, தனது தந்தை இவ்வளவு பிரமாண்டமாக திருமணத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கண்ணீர் மல்க பேசினார். மேலும், தான் மற்றும் நவீன் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தனது பாட்டியின் விருப்பத்திற்கு இணங்க, அவர் மறைவிற்கு பிறகு ஒரு வருடத்திற்குள் திருமணம் நடந்ததாகவும் தெரிவித்தார். கீர்த்தனா, சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகையாக இருந்தபோதிலும், அவர் திருமணத்திற்கு வராதது தன்னை வருத்தப்படுத்தியதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார், இது சமூக வலைதளங்களில் வைரலானது.
சர்ப்ரைஸ் விசிட்: இந்நிலையில் சிவகார்த்திகேயன் நேற்று அதாவது ஜூலை 17ஆம் தேதி கிங் காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் அவர்களுக்கு திருமண பரிசுக்கு பதிலாக ரொக்கமாக கொஞ்சம் பணம் கொடுத்தார் எனவும் கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த சிவகார்த்திகேயனிடம் கிங் காங் பேசுகையில், " நீங்கள் எப்படி மிகவும் கஷ்டப்பட்டு இந்த துறையில் முன்னேறி வந்திருக்கிறீர்களோ, நானும் அதுபோலத்தான் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்திருக்கிறேன். எனது மகள் உங்களது தீவிர ரசிகை. நீங்கள் நம்ம வீட்டுப் பிள்ளை" என மகிழ்ச்சி பொங்க பேசினார்.
இணையத்தில் டிரெண்ட்: உடனே சிவகார்த்திகேயன், ' அண்ணா, நீங்கதான் சீனியர். உங்களமாதிரிதான் நான் வந்திருக்கிறேன்' எனக் கூறினார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கிங்காங் வீட்டில் இருந்து சிவகார்த்திகேயன் புறப்படும்போது, கார் வரை நடந்து வந்து வழி அனுப்பினார் கிங் காங்.


Click it and Unblock the Notifications











