S.K: பராசக்தி சம்பவம் லோடிங்.. சிவகார்த்திகேயனை உச்சத்துக்கு கொண்டு வந்த பழைய பட டைட்டில்கள்!
சென்னை: சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கை பலருக்கும் உத்வேகத்தினைக் கொடுத்டுள்ளது. காரணம், தொலைக்காட்சியில் ஸ்டாண்டப் காமெடியனாக உள்ளே நுழைந்து, நடனப் போட்டியில் டைட்டிலை வென்று, அதன் பின்னர் தொகுப்பாளராக மாறியவர். தொகுப்பாளராக இவருக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு, இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தபோதும் கை கொடுத்தது. இப்படியான நிலையில் பழைய படங்களின் டைட்டிலை மீண்டும் சிவகார்த்திகேயன் படங்களில் பயன்படுத்தியதால், என்ன நடந்தது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானாலும், இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த பின்னர் தனுஷ் தயாரிப்பில் நடித்த படம், எதிர் நீச்சல். இந்தப் படத்தில் இவருக்கு என மாஸான காட்சிகள் போன்று எதுவும் இல்லாமல், சினிமாவில் வளர்ந்து வருகின்றார் என்பதை மனதில் வைத்து, அவரை மக்கள் மத்தியில் கதாநாயகனாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. எதிர் நீச்சல் என்ற படம் ஏற்கனவே 1968ஆம் ஆண்டு நாகேஷ் நடிப்பில், வெளியாகி இருந்தது. அந்தத் தலைப்பினை மீண்டும் வைத்தார்கள்.

அதன் பின்னர் காக்கிச் சட்டை எனும் படத்தில் கான்ஸ்டெபிளாக நடித்தார். படத்தின் க்ளைமேக்ஸில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுவார். இந்தப் படத்தில்தான் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கின்றார். சிவகார்த்திகேயனுக்கு ஆக்ஷன் காட்சிகளும் ஒர்க்-அவுட் ஆகும் என மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த படம். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் காக்கிச் சட்டை என்ற படம் 1985ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
ரஜினி: அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியாகி அதிரிபுதிரியாக வெற்றியைக் குவித்த படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கிய இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இசை, திரைக்கதை, நடிப்பு என பல பரிமாணங்களில் பெரும் வெற்றியைக் குவித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வேலைக்காரன் என்ற படம் வெளியாகி இருந்தது. இரண்டு படங்களும் மாஸ் ஹிட் அடித்தது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான படம் மாவீரன். இந்தப் படத்தின் டைட்டிலையும் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்தார். 2023ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாகவும் அமைந்தது.
அமரன்: கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அவரது மார்க்கெட்டினை உயர்த்திய படம் என்றால் அது அமரன் படம் தான். இந்தப் படத்திற்குப் பின்னர் சிவகார்த்திகேயனின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துவிட்டது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு, உருவாக்கப்பட்ட படம் என்பதால் படத்தில் ராணுவ வீரராகவே சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஏற்கனவே அமரன் என்ற பெயரில் நவரச நாயகன் கார்த்தி நடித்து, 1992 ஆம் ஆண்டு படம் ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி: தற்போது சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கு பராசக்தி என பெயர் வைத்துள்ளனர். இந்தப் பெயர் தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான படம்தான் இது. இந்தப் படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கே மாறியது. பகுத்தறிவுச் சிந்தனைகளை உள்ளடக்கிய இந்தப் படம் 1952ஆம் ஆண்டு வெளியானது. இப்போது இந்தத் டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்துள்ளதால், இந்தப் படமும் மாபெரும் ஹிட் அடிக்கும் படமாக மாறும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











