ரஜினி ரசிகர் என்று நிரூபித்த சிவகார்த்திகேயன்.. எஸ்கே 23 படத்தின் டைட்டில் இதுவா?.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முகுந்த வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறுதான் அந்தப் படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார் சிவா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அந்தப் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் மினிமம் கியாரண்டி என்ற உறுதி இருப்பதாலும், வியாபாரமும் கையை கடிக்காமல் நடப்பதாலும் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் இருக்கிறார்கள். மேலும் இப்போது சிறுவர்கள், சிறுமிகள் மத்தியில் சிவகார்த்திகேயன் டாப்பில் இருக்கிறார். எனவே இயக்குநர்களும் சிவாவை வைத்து படம் எடுக்க விரும்புகிறார்கள்.

அமரன்: கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதற்கு முன்னதாக வெளியான மாவீரனும் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு ஹிட்டுகளை கொடுத்த கையோடு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கமல் ஹாசன் தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் சிவாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை பரிசளிக்கும். ஏனெனில் ரங்கூன் படத்தின் மூலமே ராஜ்குமார் பெரியசாமி தான் ஒரு நல்ல இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார்.
எஸ்கே 23: இதற்கிடையே சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான முருகதாஸுக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை. அவர் எடுத்த படங்கள் அத்தனையும் அட்டர் ப்ளாப் ஆகின. அவரது நிலைமையை பார்த்த ரசிகர்கள், அட நம்ம முருகதாஸுக்கா இந்த நிலைமை என பரிதாபத்தில் உச் கொட்டுகிறார்கள். எனவே இப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுக்க முருகதாஸ் காத்திருக்கிறார்.
சிவாவின் கேரக்டர்?: இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடித்திருப்பதாக ஒரு தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதேசமயம் ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், தன்னுடைய கரியரில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதன் காரணமாக பாடல்கள் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
சிங்கநடை சிவகார்த்திகேயன்?: இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு சிங்கநடை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படையப்பா படத்தின் ஓபனிங் சாங்கில் வரும் முதல் வார்த்தையே இதுதான். சிவாவின் படத்துக்கு சிங்கநடை டைட்டில் என்ற தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், அட ரஜினியின் தீவிரமான ரசிகர் என்பதை சிவகார்த்திகேயன் மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
அடுத்த படம்: சிவகார்த்திகேயன் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படம் செய்வதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே டான் என்ற வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சல்மான் கானை வைத்து படம் இயக்குகிறார். அதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியிருக்கிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











