விடுதலையைவிட மேல்.. சூரியை ஹீரோவாக்க முதலில் முயன்றேன்.. நடக்கவில்லை.. சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
சென்னை: நடிகர் சூரி இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் அடுத்ததாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்தச் சூழலில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
சூரி கோலிவுட்டின் முன்னணி காமெடியன். தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்துவந்த அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை ஹீரோ ரோலில் வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். மேலும் சண்டை காட்சிகளிலும் ரிஸ்க்கையும் எடுத்திருந்தார் சூரி. அது அவருக்கு பெரும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது. விடுதலை படத்தில் அவரது நடிப்பை பார்த்த பலரும் சூரி இனி ஹீரோவாக தொடரலாம் என்று நம்பிக்கை வார்த்தை அளித்தனர்.

கருடன்: பெரும்பாலானோரின் கருத்துப்படியே சூரி இப்போது ஹீரோவாகவே நடித்துவருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. மேலும் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார் சூரி. இந்தப் படங்கள் தவிர்த்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் மே 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
சிவகார்த்திகேயன் பேச்சு: இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "கருடன் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது முழுக்க முழுக்க ஆக்ஷன் என்று தெரிகிறது. துரை செந்தில்குமார் ஒருவரை திட்ட வேண்டும் என்றால்கூட சிரித்துக்கொண்டேதான் பேசுவார். அருமையான களத்துடன் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
நானும் கதை சொல்வேன்: அவர் எப்போது என்னிடம் கதை சொல்ல வந்தாலும் நானும் ஒரு கதை சொல்வேன். சூரி எனக்கு உண்மையிலேயே அண்ணன்தான். நான் சேனலில் வேலை செய்யும்போது எல்லோரையும் அண்ணன் என்று அழைப்பேன். சூரியை ஆத்மார்த்தமாக அண்ணன் என்று சொல்வேன். ஹீரோவாக நீங்கள் நடிக்கலாம் என்று சொல்லி அவரிடம் முதலில் கதை கூறியது நான். இப்போது பெரிய பெரிய இயக்குநர்களோடு வேலை செய்கிறார். நான் சொன்னபோது அதெல்லாம் எனக்கு செட் ஆகாது என சொன்னார்.
தம்பி ஒன்னு சொல்ல வேண்டும்: அப்படியிருக்கையில் ஒருநாள் என்னிடம் அவர், தம்பி உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று கூறி, 'வெற்றிமாறன் என்னை வைத்து படம் இயக்க முடிவு செய்திருக்கிறார்' என்று கூறினார். நான் உடனே, 'சூப்பர் அண்ணே அவர் என்ன சொல்றாரோ அதை அப்படியே பண்ணிடுங்க' என்றேன். அதற்கு அவரோ, 'வெற்றிமாறன்கூட நான் படம் பண்ணிடுவேன். ஆனா வேறு யாரும் கூப்பிடலனா என்ன செய்றது' என்று சூரி கேட்டார்.
குறைத்து மதிப்பிடாதீங்க: காமெடி ஆக்டர்களை யாரும்குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர்களால்தான் சீரியஸான கேரக்டரையும் பண்ண முடியும். நாங்கள் கொட்டுக்காளி படத்தில் இணைந்திருக்கிறோம். விடுதலை படத்தைவிடவும் அந்தப் படம் ஒருபடி மேலே அமையும். அவர் ரொம்ப தெளிவாக இருக்கிறார். கொட்டுக்காளி படம் விரைவில் வெளியாகும். சூரி அண்ணனுக்கு சப்போர்ட் செய்ய சசிக்குமார் இதில் இணைந்திருக்கிறார். நானும் சூரி அண்ணன் மாதிரி உங்களுடன் (சசிக்குமார்) நடிப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











