மாமனார் சொன்னது இதைத்தான்.. அப்படிப் பண்ணா ஆர்த்திக்கிட்ட மாட்டிப்பேன் - சிவகார்த்திகேயன் பளிச்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்காக பரபரப்பாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் பொங்கலுக்கு எந்தவொரு பின்வாங்கலும் இல்லாமல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதனை முன்னிட்டு நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது இணையத்தில் டிரெண்டானது. மேலும், யூடியூப் சேனல்களுக்கு அவர் அளித்து வரும் பேட்டிகள் எல்லாம் ரசிகர்கள் கவனத்தை கவர்ந்துள்ளது.
விஜய் டிவியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்து கொண்டு அந்த டிவியிலேயே தொகுப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

100 கோடி நாயகன்: நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் அவருக்கு 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படமும் 100 கோடி வசூலை ஈட்டியது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். காமெடி மற்றும் சமூக கருத்து கொண்ட அந்த படமும் சுமார் 100 கோடி அளவு வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. அடுத்து பொங்கலுக்கு அயலான் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார்.
அயலான் புரோமோஷன்: ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏலியன் கதையில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். அயலான் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்ற நிலையில், யூடியூப் சேனல்களுக்கு சிவகார்த்திகேயன் பேட்டி அளித்து வருகிறார். அந்த பேட்டியில் தலைவர் 171வது படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், நடிகர் அஜித் உடன் பைக் ரைட் போக வேண்டும் என்கிற ஆசையையும் அஜித் அது பற்றி தன்னிடம் பேசியது குறித்தும் வெளிப்படுத்தியிருந்தார்.
மாமனார் சொன்னது: அயலான் திரைப்படம் அனைத்து குழந்தைகளுக்கும் பிடித்த படமாக இருக்கும் என பேசிய சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தைப் பற்றியும் ஆரம்ப காலத்தில் தான் எப்படி எல்லாம் சென்னையில் வந்து கஷ்டப்பட்டேன் என்பது குறித்தும் கூறியுள்ளார். சென்னைக்கு வந்து கஷ்டம் தாங்க முடியாமல் சொந்த ஊருக்கே ஓடியவர் என் மாமனார். ஆனால் நான் சென்னைக்கு வந்து சினிமாவில் சாதித்ததை பார்த்து இது பெரிய விஷயம் மாப்பிள்ளை, நானெல்லாம் சென்னையோட கஷ்டம் தாங்க முடியாமல் ஊருக்கு ஓடி வந்தவன் என பாராட்டி இருந்தார்.
மனைவி கண்டுபிடிச்சுடுவா: நான் ரொம்ப எக்ஸ்பிரஸ் பண்ண மாட்டேன். மனைவி ஆர்த்திக்கு உட்காந்து கொண்டு கவிதை எல்லாம் எழுதி தர மாட்டேன் அப்படி எல்லாம் செய்தால் ஏதாவது பிரச்சனையா என கண்டுபிடித்து கிண்டல் செய்வார். ஏதாவது தோன்றினால் அப்படியே அவரிடம் நேரடியாகவே சொல்லி விடுவேன் என்றும் தனது மனைவி பற்றியும் அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











