திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைக்கிறதா பராசக்தி?.. விஜய் சைலண்டா காரியத்தை சாதிச்சுட்டார் போலயே
சென்னை: இயக்குநர் சுதா கொங்கராவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி, வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் பராசக்தி படம், கடந்த 1965ஆம் ஆண்டு கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர் குறித்த கதைக்களத்தையும் அதில் மாணவர்கள் அமைப்பு எந்த வகையில் பங்காற்றியது என்பது குறித்தும் படமாக்கி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இப்படி இருக்கையில் படம் திமுகவை கொண்டாடுவது போல இருக்கிறது என்றும் அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை கடுமையாகச் சாடுவது போல இருக்கிறது என்பது திரைக்கதையைப் பார்த்தாலே தெரிகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
டான் பிக்சர்ஸ் தயாரித்த பராசக்தி படம் வெளியானால் சில மாதங்களில் நடக்க உள்ள பொதுத் தேர்தலில் திமுகவின் பிரச்சாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், ஜன நாயகன் வெளியானால் அது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் பேச்சுகள் அடிபட்டது. இந்நிலையில் ஜன நாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் இன்னும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில் பராசக்தி படம் அறிவித்தபடி இன்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிவிட்டது. இப்போது அடிபடும் பேச்சுக்கள் எப்படி இருக்கிறது என்றால், பராசக்தி படமும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் ஆதரவாக வாக்குகளை பெற்று தருவது போன்ற சூழலை உருவாக்கி உள்ளது என்ற பேச்சுக்கள் பலமாக அடிபடுகிறது.
தேர்தல் நேரம்: அதாவது தற்போதைய தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு பேச்சு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அடிபடுகிறது. இந்த பேச்சை காங்கிரஸ் கட்சியினர் ஒரு புறம் பகிரங்கமாக மறுப்பது, ஒரு புறம் விஜயை ரகசியமாக சந்திப்பதும், திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை அதிக அளவில் முன் வைப்பதும் என்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ்: இப்படி இருக்கையில், பராசக்தி படம் மொத்தமாகவே காங்கிரஸ் கட்சியின் 1965 கால நடவடிக்கைகளை கடுமையாக தாக்கி படமாக்கி உள்ளதால், இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் இப்படியான படத்தை முதலமைச்சரின் பேரன் இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்திருப்பது காங்கிரஸ் கட்சியினரை சங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு வரும் ராகுல் காந்தியிடம் இது தொடர்பாக குறிப்பிட்டு பேச உள்ளார்களாம்.
விஜய்க்கு சாதகமா?: அதுவும் அவரது பாட்டியும் முன்னாள் இந்திய பிரதமருமான இந்திரா காந்தி குறித்த காட்சிகள் அவருக்கு வழங்கப்பட்ட வசனங்கள் குறித்து எல்லாம் விளக்கிப் பேசியும், விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆதரவு, ஆட்சியில் பங்கு என்று அவர் அறிவித்துள்ளதையும் எடுத்துக் கூறி, காங்கிரஸை தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க தலைமையை கன்வின்ஸ் செய்ய எல்லா முயற்சிகளையும் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்களைப் பார்க்கும்போது, பராசக்தி படத்தின் ரிலீஸ் என்பது அவருக்கு ஒருவகையில் சாதகமான முடிவு தான் என்று பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











